ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும் நிதியாண்டிற்கான முன்னுரிமை கடன் திட்ட அறிக்கையை மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டார்.
அப்போது ஆட்சியர் கதிரவன் கூறியதாவது:
ஈரோடு மாவட்டத்தில் வரும் நிதி ஆண்டிற்கு ரூ.13 ஆயிரத்து 750 கோடியே 58 லட்சம் கடன் வழங்க வாய்ப்பு உள்ளதாக நபார்டு வங்கி கடன் திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், விவசாயத்துறைக்கு மொத்தமாக ரூ.7692.45 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. சிறு குறு தொழில் துறைகளுக்கு ரூ.3729.82 கோடி கடன் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஆண்டு வங்கிகள் மூலம் சிறு குறு தொழில் துறைகளுக்கு ரூ.3,095 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
வங்கியாளர்கள் சிறு, குறு தொழில்துறைகள், தோட்டக் கலைப் பயிர்களுக்கு மத்திய கால விவசாயக் கடன்கள், பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் நீர் மேலாண்மை மற்றும் சேமிப்பு சாதனங்கள் அமைத்தல் போன்றவற்றிக்கு அதிகளவில் கடன் வழங்க வேண்டும். விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்க கால்நடை வளர்ப்பு மற்றும் மீன் வளத்திட்டங்களுக்கு நடைமுறை மூலதனக்கடனாக விவசாயக் கடன் அட்டைத் திட்டத்தின் கீழ் கடன் வழங்க வேண்டும், என்றார்.
இந்நிகழ்ச்சியில் நபார்டு வங்கியின் உதவி பொது மேலாளர் சி.ஆர்.அபுவராஜன், முன்னோடி வங்கி மேலாளர் ச.அரவிந்தன், வேளாண் இணை இயக்குநர் சின்னச்சாமி, கனரா வங்கி மண்டல மேலாளர் ஜனார்த்தன ராவ், மாவட்ட தொழில் மைய மாவட்ட மேலாளர் திருமுருகன், மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago