திருவாரூர் மாவட்டம் கள்ளிக்குடி பகுதியில் செல்லும் சித்தாறின் கரையில் கனமழை காரணமாக உடைப்பு ஏற்பட்டது. இதனால், கள்ளிக்குடி, வடக்குவெளி, மணல்மேடு, தென் ஓடாச்சேரி உள்ளிட்ட 5 கிராமங்களில் வெள்ளம் சூழ்ந்து, வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது.
குடியிருப்புகளில் வெள்ளம் புகுந்ததால், இந்த கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முதல் மின்சாரம், குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள், முதியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.
இதுகுறித்து கள்ளிக்குடியைச் சேர்ந்த சுகுமார், சுதர்சன், மகேஸ்வரி, வின்சன்ட் உள்ளிட்ட கிராமவாசிகள் கூறியது: கனமழை பெய்யும் சமயங்களில் ஓடம்போக்கி ஆற்றிருந்து பிரிந்து வரும் வடிகால் வாய்க்காலான சித்தாறில் ஏற்படும் வெள்ளப்பெருக்கால், கிராமங்களில் நீர் புகுந்து விடுகிறது. கடந்த 30 ஆண்டுகளாக சித்தாறு தூர்வாரப்படாததே இதற்கு காரணம்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப் பட்டுள்ள கிராம மக்கள் தங்குவதற்கான பாதுகாப்பு முகாமும் நேற்று மதியம் வரை அமைக் கப்படவில்லை. இனிமேலாவது சித்தாறை தூர்வாரி, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago