டெல்லி விவசாயிகள் போராட்டத் துக்கு ஆதரவு தெரிவித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் சேலம், ஈரோடு, நாமக்கல்லில் மறியல் போராட்டம் நடந்தது.
மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஈரோட்டில் மறியல் போராட்டம் நடந்தது.
ஈரோடு காந்திஜி சாலையில் உள்ள தலைமை அஞ்சலகம் முன்பு நடந்த மறியலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக் குழு உறுப்பினர் பத்ரி, இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் தலைமை வகித்தனர். மறியலில் ஈடுபட்டோர் வேளாண் திருத்தச் சட்டங்களை திரும்பப் பெறக்கோரியும், விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் கோஷங்களை எழுப்பினர். மறியலில் ஈடுபட்ட 200 பேரை போலீஸார் கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்கவைத்து பின்பு விடுவித்தனர்.
நாமக்கல்லில் மறியல்
அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு மற்றும் இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம் மெட்டாலாவில் மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாநில தலைவர் கண்ணன் தலைமை வகித்தார். அனைத்து விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.பெருமாள், திமுக விவசாய அணி ஒன்றிய செயலாளர் என்.அய்யாதுரை, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் செல்வராஜ், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாவட்ட செயலாளர் சதாசிவம், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் சரவணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 14 பேரை கைது செய்த போலீஸார், சிறிது நேரத்திற்குப் பின்னர் விடுவித்தனர்.
சேலத்தில் 70 பேர் கைது
சேலம் தலைமை தபால் நிலையம் முன்பு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நேற்று மறியல் போராட்டம் நடந்தது.இதில் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பில் மறியல் போராட்டம் நடந்தது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மோகன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் தலைமையில் கூடிய தொண்டர்கள், மத்திய வேளாண் திருத்த சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று முழக்கமிட்டனர். சாலை மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒன்பது பெண்கள் உள்பட 70 பேரை டவுன் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையிலான போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago