அரசு மாணவர் விடுதிகளில் காய்கறித் தோட்டம் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

பிற்படுத்தப்பட்டோருக்கான பள்ளி மற்றும் கல்லூரி மாணவர் விடுதிகளில் காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டுமென துறை இயக்குநர் அறிவுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து தமிழக அரசு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் சி.காமராஜ், துறை அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை விவரம்:

தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் 1354 பள்ளி மற்றும் கல்லூரி விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. இவ்விடுதிகளில் உள்ள காலி நிலத்தில் கொத்தமல்லி, புதினா, இஞ்சி, கத்தரி, வெண்டை, மிளகாய், கொத்தவரங்காய், முள்ளங்கி ஆகிய காய்கறி வகைகளை விடுதி காப்பாளர்கள் பயிரிட வேண்டும். வேளாண் மற்றும் தோட்டக்கலைத்துறை உதவியுடன் நாற்றங்கால் அமைத்து விதைகளை வாங்கி பாத்தி அமைத்து தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர்கள் வாழை, எலுமிச்சை, கருவேப்பிலை, பப்பாளி ஆகிய மர வகைகளை நட்டு பராமரிக்க வேண்டும். இந்த செடி மற்றும் மரங்களுக்கு மண்புழு உரத்தினை பயன்படுத்த வேண்டும். இந்த வழிமுறைகளைப் பின்பற்றி தோட்டங்களை நல்ல முறையில் பராமரிக்கும் காப்பாளர் மற்றும் காப்பாளினி, அலுவலர்களுக்கு மதிப்பெண் வழங்கப்பட்டு, அதிக மதிப்பெண் பெறுவோருக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை பரிசாக வழங்கப்படும். அந்தந்த மாவட்ட அலுவலர்கள், தோட்டம் அமைப்பது தொடர்பான பணிகளைக் கண்காணித்து, அவ்வப்போது வாட்ஸ் அப் மூலம் பதிவிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

பிற்படுத்தப்பட்டோர் நல விடுதிகளில் தங்கும் மாணவர்களின் உணவுக்குத் தேவையான காய்கறிகள், வெளிச்சந்தையில் காப்பாளர்கள் வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற காய்கறித் தோட்டங்கள் அமையும் பட்சத்தில், குறிப்பிட்ட காய்கறிகளை தங்களது தோட்டத்தில் இருந்து சேகரித்து விடுதி மாணவர்களுக்கான உணவில் சேர்க்கும் வாய்ப்பு உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்