திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதித்த 219 வீடுகள் மற்றும் கால்நடைகளுக்கான நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ஆர். காமராஜ் தெரிவித்தார்.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி நகராட்சிக்குட்பட்ட பழைய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, லட்சுமி காலனி, தெப்பக்குளம் வடகரை, இந்திரா நகர் மற்றும் நீடாமங்கலம் வட்டத்துக்குட்பட்ட ரிஷியூர், பெரம்பூர் ஆகிய பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்றும் பணியை மாநில உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். ஆட்சியர் வே.சாந்தா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
அப்போது, செய்தியாளர்களி டம் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறி யது: திருவாரூர் மாவட்டத்தில் பெய்துவரும் கனமழை ஓரிரு நாட்கள் நீடிக்கும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளையும் பார்வையிட்டு, அரசு அலுவலர்கள், அரசு உயர் அலுவலர்கள் அந்தந்த பகுதிகளிலேயே குழுக்களாக தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். மழையால் பாதிக்கப் படுபவர்களை தங்கவைக்க திருவாரூர் மாவட்டத்தில் 47 முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த முகாம்களில் 510 குடும்பத்தை சேர்ந்த 1,800 பேர் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
மழையால் மாவட்டத்தில் இதுவரை 219 வீடுகள் பாதிப்படைந்துள்ளன. ஆடு, மாடு என 29 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. இவற்றுக்கான உரிய நிவாரணம் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். வெகுவிரைவில் கணக்கெடுப்பின் படி நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago