பள்ளிகொண்டா அருகே மழைநீர் கால்வாயை சீரமைக்கக் கோரி சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் நேற்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்டம் இறைவன் காடு காட்டுக்கொல்லை கிராமத்தில்சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பத் தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம் குண்டன்குளம் மழைநீர் கால்வாய் வழியாக வெளியேறவில்லை. கால்வாயை தூர் வாராததால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் புகார் எழுந்துள்ளது.
மழைநீரை வெளியேற்ற தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்காததால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் நேற்று சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த பள்ளிகொண்டா காவல் துறையினர் விரைந்து சென்று, பொதுமக்களை சமாதானம் செய்து சாலையின் ஒரு பகுதியில் நிற்குமாறு அறிவுறுத்தினர். பின்னர், போக்குவரத்தை சரி செய்தனர்.
இதையடுத்து, அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அதி காரிகள் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது, மழைநீர் கால்வாய் தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையேற்று, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago