திருப்பத்தூரில் இருந்து வாணி யம்பாடி எல்லை தொடங்கும் வரை குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க மாநில அரசுக்கு அழுத்தம் தரும் வகை யில், வரும் 24-ம் தேதி காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் சத்தியாகிரகம் போராட்டம் நடத்தப்படும் என மாவட்டத் தலைவர் பிரபு செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திருப்பத்தூர் மாவட்ட காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் பிரபு கூறும்போது, "திருப்பத்தூர் தனி மாவட்டமாக உருவாக்கப்பட்டு கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிறது. ஆனால், இங்கு பொதுமக்களுக்கு தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை மாநில அரசு செய்யாமல் உள்ளது.
மாவட்ட நிர்வாகம் திறம்பட இயங்க பல்வேறு துறைகளுக்கு அரசு அதிகாரிகள் இன்னமும் நியமிக்கப்படாமல் உள்ளனர். பல அலுவலகங்கள் வாடகை கட்டிடங்களிலும் பழுதடைந்த கட்டிடங்களிலும் இயங்கி வரு கின்றன. இதனால், அரசு அதிகாரி களுக்கும், அங்கு வரும் பொது மக்களுக்கும் பெரும் இடை யூறுகள் இருக்கின்றன.
குறிப்பாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் சாலை வசதிகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் இருந்து வாணியம்பாடி செட்டியப்பனூர் வரை ஏறத்தாழ 22 கிலோ மீட்டருக்கு சாலை வசதி சரியில்லை. தினசரி இந்த சாலை வழியாக நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகளும், தனியார் வாகனங்களும் வந்து செல்கின்றன.
தற்போது, மழைக்காலம் என்பதால் திருப்பத்தூர் - வாணி யம்பாடி பிரதான சாலைகள் போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை. வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். வாணியம்பாடியில் இருந்து சேலம் வரை நான்கு வழிச்சாலைக்காக மாநில அரசு நிதி ஒதுக்கீடு செய்து அதற்கான பணிகளை தொடங்குவதாக அறிவித்து பல மாதங்கள் கடந்துவிட்டன.
ஆனால், இதுவரை எந்தப் பணிகளும் நடைபெறவில்லை. பொதுப்பணித்துறை முதல்வரின் கட்டுப்பாட்டில் இருப்பதால் சிதலமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
இதைக்கண்டித்து, வரும் 24-ம் தேதி ஜோலார்பேட்டை பகுதியில் உள்ள இந்திரா காந்தி, காமராஜர் சிலை அருகே மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் தொடர் சத்தியாகிரகம் போராட்டத்தை நடத்த உள்ளோம். சாலையை சீரமைக்கும் பணிகள் தொடங்கும் வரை இந்த போராட்டம் நடைபெறும்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago