ஈரோடு ரயில் நிலையத்துக்கு குண்டு மிரட்டல் விடுத்த இளைஞர் கைது

By செய்திப்பிரிவு

ஈரோடு மாவட்டத்தில் 10 இடங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுத்த இளைஞரைப் போலீஸார் கைது செய்தனர்.

சென்னை ரயில்வே தலைமை அலுவலக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அதில் பேசிய நபர் தன்னுடைய பெயர் அப்துல்கரீம் என்றும், ஈரோடு ரயில் நிலையம் அருகில் உள்ள பெட்ரோல் பங்க், பேருந்து நிலையம், மணிக்கூண்டு, ரயில்நிலையம் உள்பட மாவட்டம் முழுவதும் 10 இடங்களில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சென்னையில் இருந்து, ஈரோடு ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஈரோடு முழுவதும் நேற்று முன்தினம் இரவு போலீஸார் உஷார் படுத்தப்பட்டு, தீவிர சோதனை மற்றும் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. கட்டுப்பாட்டு அறைக்கு வந்த செல்போன் எண்ணின், டவர் சிக்னலைக் கொண்டு தேடுதல் வேட்டை நடந்தது.

இதில், கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம், சங்கர் நகரைச் சேர்ந்த ரங்கராஜன் மகன் சந்தோஷ்குமார் (32) என்பவர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இவர் சற்று மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதும், ஏற்கெனவே இதுபோன்று 2 முறை வெடிகுண்டு மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டு இவர் மீது உள்ளதும் தெரியவந்தது. இதையடுத்து தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் ஈரோடு ரயில்வே போலீஸார் வழக்குப் பதிவு செய்து சந்தோஷ்குமாரை கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்