கடந்த செப்டம்பரில் திறந்து வைக்கப்பட்ட குந்துகால் மீன்பிடி துறைமுகத்துக்கு முதல் முறையாக 2 ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் 21 டன் சூரை மீன்களுடன் வந்தன.
இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து தாக்கப்படுவதாலும், பாக் நீரிணைப் பகுதியில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், ஆழ் கடல் மீன்பிடிப்புத் திட்டத்தை 2017-ம் ஆண்டு மத்திய, மாநில அரசுகள் கொண்டு வந்தன.
இதன்படி ஆழ்கடல் விசைப்படகுகளை மீனவர்கள் வாங்க 70 சதவீத மானியத்தை அரசு வழங்குகிறது.
இத்திட்டத்தில் ஆழ்கடல் மீன்பிடிப் படகுகளை நிறுத்த ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே மூக்கையூர், பாம்பன் அருகே குந்துகால் ஆகிய இடங்களில் அனைத்து வசதிகளுடன் கூடிய மீன்பிடி இறங்கு தளங்கள் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. இதில் ரூ.113.90 கோடி செலவில் மூக்கையூர் மீன்பிடி துறைமுகப் பணிகள் முடிவடைந்து, 2019-ம் ஆண்டு திறந்து வைக்கப்பட்டது. ஆனால் துறைமுகத்தில் ஆழம் குறைவாக இருந்ததால் படகுகள் நிறுத்தப்படவில்லை.
ஆழப்படுத்தும் பணிகள் முடிவடைந்த பின் கடந்த 2 மாதங்களுக்கு முன்புதான் இத்துறைமுகம் பயன்பாட்டுக்கு வந்தது.
அதனையடுத்து பாம்பன் அருகே குந்துகாலில் ரூ.70 கோடி செலவில் ஆழ்கடல் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டது. இப்பணிகள் முடிந்து கடந்த செப்டம்பர் 19-ம் தேதி முதல்வர் பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இங்கு 450 ஆழ்கடல் விசைப்படகுகள் மற்றும் 100 நாட்டுப்படகுகள் நிறுத்தும் வசதியும், 100 டன் அளவில் குளிர்ப்பதனக் கிடங்கு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. முதல்வர் திறந்து வைத்த பின்பும் கடந்த ஒன்றரை மாதங்களாக இத்துறைமுகம் பயன்பாட்டுக்கு வராமல் இருந்தது.
இந்நிலையில் நேற்று முதல் முறையாக ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த அருளானந்தம், சிம்போரியான் ஆகியோரது 2 படகுகள் ஆழ்கடலில் மீன்பிடித்துவிட்டு குந்துகால் துறைமுகத்துக்கு வந்தன.
கிலோ ரூ.60 என்ற விலையில் ஒவ்வொரு படகில் இருந்தும் 10.5 டன் சூரை மீன்கள் விற்பனை செய்யப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago