சிவகங்கையில் சிறுமி கொலை வழக்கில் இளைஞருக்கு ஆயுள் தண்டனை

By செய்திப்பிரிவு

சிவகங்கை இந்திரா நகரைச் சேர்ந்தவர் லெட்சுமணன். இவர் திருப்பூரில் தையல் தொழிலாளியாக வேலை செய்தார். இவர் தனது மனைவி உஷா, மகன் அஜய்குமார், மகள் அட்ஷயா(8) ஆகியோருடன் இந்திரா நகரில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். மாற்றுத் திறனாளியான அட்ஷயா, அங்குள்ள பள்ளியில் 1-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 2013-ம் ஆண்டு ஜூலை 4-ம் தேதி இயற்கை உபாதையைக் கழிக்கச் சென்ற அட்ஷயாவை காணவில்லை. இது குறித்து அவரது தாயார் உஷா சிவகங்கை டவுன் போலீஸில் புகார் கொடுத்தார்.

இந்நிலையில் ஜூலை 7-ம் தேதி உஷா வீட்டின் அருகே உள்ள உழைக்கும் மக்கள் விடுதலை இயக்க அலுவலகத்தில் இருந்து துர்நாற்றம் வீசியது. அங்கு போலீஸார் சோதனை செய்தபோது அட்ஷயாவை கொலை செய்து, அவரது உடலை சாக்குப் பையில் கட்டி அலுவலகச் சுவருக்குள் வைத்து பூசி இருந்தது தெரிய வந்தது.

தொடர்ந்து போலீஸார் விசாரணையில், அந்த அலுவலகத்தில் தங்கியிருந்த ராமநாதபுரம் மாவட்டம், பாண்டுகுடியைச் சேர்ந்த அமல்ராஜ்(30) என்பவர் கொலை செய்தது தெரிய வந்தது. மேலும் தனது அலுவலகம் அருகே சிறுமி இயற்கை உபாதையை கழித்ததால் ஆத்திரத்தில் கல் வீசியதாகவும், அதனால் சிறுமி இறந்ததாகவும், இதையடுத்து சிறுமியை சுவரில் வைத்துப் பூசியதாகவும் அமல்ராஜ் வாக்குமூலம் அளித்தார். அவரை போலீஸார் கைது செய்தனர். இவ்வழக்கு சிவகங்கை மாவட்ட கூடுதல் நீதிமன்றத்தில் நடந்தது. வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் ரபீ, அமல்ராஜுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.15 ஆயிரம் அபராதமும் விதித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்