படித்த வேலையற்ற இளைஞர் களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் மானியத் தொகை உயர்த்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் பிரசன்னபாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
படித்த வேலையற்ற இளைஞர் களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம், மாவட்ட தொழில் மையம் மூலமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுநாள் வரை உற்பத்தித் தொழிலுக்கு ரூ.10 லட்சமும், சேவை தொழிலுக்கு ரூ.5 லட்சமும், வியாபாரத்துக்கு ரூ. 5 லட்சமும் என திட்ட மதிப்பீடு நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
தற்போது, தமிழக அரசு திட்ட மதிப்பீட்டு தொகையை உயர்த்தி உள்ளது. அதன்படி உற்பத்தி தொழிலுக்கு ரூ.15 லட்சமும், அதிகபட்ச தகுதியான மானியம் ரூ.1.25 லட்சத்திலிருந்து ரூ.2.50 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது உயர்த்தப்பட்டுள்ள தகுதியான மானியம், கடந்த பிப்ரவரி 14-ம் தேதிக்குப் பின்னர் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறும் அனைவருக்கும் பொருந்தும். இத்திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயது வரையில் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். சிறப்பு பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு 45.
இத்திட்டத்தின் கீழ் சுயதொழில் தொடங்கி பயன் பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/uyegp என்ற இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
இணையதள விண்ணப்பத்துடன் கல்வித் தகுதிக்கான சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது வாக்காளர் அடையாள அட்டை அல்லது வட்டாட்சியரால் வழங்கப்பட்ட இருப்பிடச் சான்று விலைப்புள்ளி பட்டியல், திட்ட அறிக்கை மற்றும் ஜாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களுடன் பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, கிருஷ்ணகிரி - 635001 என்கிற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago