டாஸ்மாக் மதுபான விற்பனை குறைய காரணம் என்ன? விவரங்கள் தர மேற்பார்வையாளர்களுக்கு நிர்வாகம் உத்தரவு

By டி.செல்வகுமார்

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் டாஸ்மாக் மதுபானக் கடைகள், பார்கள் மூடப்பட்டன. சில மாதங்கள் கழித்து கரோனா தொற்றுகுறைந்ததும், பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

தமிழகத்தில் சென்னை தவிர பிற மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. பின்னர் சென்னையிலும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. ஆனால்பார்கள் இதுவரை திறக்கப்படவில்லை.

தமிழகத்தில் தற்போது 4 ஆயிரத்து 829 கடைகளில் மதுபானம் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், மாநிலம் முழுவதும் நூற்றுக்கணக்கான டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்துள்ளது. மக்களிடம் பணப் புழக்கம்இல்லாததால் மதுபான விற்பனைகுறைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:

தமிழகத்தில் விற்பனை குறைந்த டாஸ்மாக் கடைகள் கணக்கெடுப்பு மற்றும் அதற்கான காரணங்களைக் கண்டறியும் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள டாஸ்மாக் மேலாளரிடம் கடந்த ஆண்டு நவம்பர் முதல் வாரத்தில் டாஸ்மாக் கடைகளின் விற்பனை எவ்வளவு, இந்த ஆண்டு நவம்பர் முதல் வாரத்தில் விற்பனை எவ்வளவு என்ற விவரத்தை உடனடியாக அனுப்ப வேண்டு்ம் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளில் விற்பனை குறைந்தது ஏன் என்ற விவரத்தை அக்கடையின் மேற்பார்வையாளர் தெரிவிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். டாஸ்மாக் இடம் மாற்றப்பட்டது, பார் செயல்படாதது, கள்ளச்சாராயம் விற்பனை, புதுச்சேரி மதுபான விற்பனை போன்றகாரணங்களால் விற்பனை குறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுதவிர வேறு ஏதாவது காரணம் இருக்கிறதா என்று கண்டறியவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தீபாவளியையொட்டி, அனைத்து டாஸ்மாக் கடையிலும் 7 நாட்கள் சரக்குகளை இருப்பு வைக்க வேண்டும். இல்லாவிட்டால் அக்கடையின் மேற்பார்வையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்