கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அடுத்தகூடுவெளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கு வரும் 13-ம் தேதிவரை விண்ணப்பிக்கலாம் என்று கல்லூரி முதல்வர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கூடுவெளி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் நடப்பு 2020-2021-ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நான்காம் கட்டக் கலந்தாய்வு வரும் 13-ம் தேதி வரை நடைபெறுகிறது.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதியுள்ள மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
இக்கல்லூரியில் முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட கலந்தாய்விற்குப் பிறகும் காலியாக உள்ள இடங்களுக்கு மாணவர்களின் தகுதிஅடிப்படையில் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டுள்ளது. இக்கல்லூரியில் அமைப்பியல், இயந்திரவியல், மின்னியல், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல், கணினியியல் ஆகிய 5 பாடப் பிரிவுகளில் பட்டய வகுப்புகள் நடைபெறுகின்றன. வருடாந்திர கல்விக் கட்டணம் ரூ.2,202. மேலும் இக்கல்லூரியில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ், இலவச மடிக்கணினி, முதலாண்டு பாடப் புத்தகங்கள், கல்வி உதவித்தொகை மற்றும் தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும் வழங்கப்படும்.
விண்ணப்பிக்க விருப்பம் உள்ள மாணவர்கள் கல்லூரி அலுவலகத்தை 04144- 238233 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம். தகுந்த கல்வி மற்றும் சாதிச் சான்றிதழ்களை விண்ணப்பத்துடன் இணைத்து வரும் 13-ம் தேதிக்குள் அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். இவ்வாறு கூறியுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago