திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வஉசி சாலையில், பின்லே அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளி உள்ளது. இந்தப் பள்ளி 1847-ம் ஆண்டு தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு 170 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடம் இன்றளவும் பிரம்மாண்டமாக காட்சியளிக்கிறது.
இந்நிலையில், இக்கட்டிடத்தின் பழமை தன்மையை கருதி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ரூ.85 லட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு, அந்தக் கட்டிடத்தில் தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இதையடுத்து, பள்ளியின் பழைய கட்டிடத்தை இடிக்க தஞ்சை, திருச்சி மறை மாவட்ட திருச்சபை தற்போது முடிவு செய்துள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள பள்ளியின் பழைய மாணவர்கள், “மிகவும் தொன்மை வாய்ந்த இந்த பள்ளிக் கட்டிடத்தை மீண்டும் புனரமைப்பு செய்து, அதில் பெண்கள் மேல்நிலைப் பள்ளி அல்லது இளைஞர்களுக்கான தொழிற்பயிற்சி மையம் நிறுவ வேண்டும்” எனக் கோரி திருச்சி, தஞ்சை திருச்சபையின் பேராயர் சந்திரசேகரனிடம் 2 நாட்களுக்கு முன்பு மனு அளித்துள்ளனர்.
இதுகுறித்து ஆர்.வி.ஆனந்த் உள்ளிட்ட பள்ளியின் முன்னாள் மாணவர்கள் கூறியபோது, “ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட வருவாய்த் துறை கட்டிடங்களை நினைவுச் சின்னமாக பராமரிக்க அரசு உத்தரவு இருப்பதைப் போல, கல்வித் துறையிலும் இதுபோன்ற பழைய பள்ளிக் கட்டிடங்களை பராமரித்து, அடுத்த தலைமுறையினருக்கு நினைவுச் சின்னமாக கொண்டு சேர்க்க உத்தரவிட வேண்டும்” என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago