உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்படி குழு செயல்படும் யானைகள் வழித்தட ஆய்வுக் குழு தலைவர் திட்டவட்டம்

By செய்திப்பிரிவு

உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின் படியே யானைகள் வழித்தட ஆய்வுக்குழு செயல்படும் என ஓய்வு பெற்ற நீதிபதி கே. வெங்கட்ராமன் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள விடுதிகள், ஆக்கிரமிப்புகளை ஆய்வு நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில் தேசிய யானைகள் பாதுகாப்புத் திட்ட தொழில்நுட்பக் குழு உறுப்பினர் அஜய் தேசாய் மற்றும் தேசிய வன உயிரின வாரிய முன்னாள் உறுப்பினர் பிரவீன் பார்கவா ஆகிய மூவர் அடங்கிய குழுவை உச்ச நீதிமன்றம் அமைத்தது.

நீலகிரி மாவட்டம் மசினகுடி, பொக்காபுரம் மற்றும் மாவனல்லா, மாயாறு போன்ற யானைகள் வழித்தடத்தில் மேற்கண்ட குழுவினர் ஆய்வு செய்தனர்.

ஆய்வுக்குப் பின் குழுவின் தலைவர் கே.வெங்கட்ராமன் கூறியதாவது:

உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதலின் அடிப்படையிலேயே இக்குழு செயல்படும். யானைகள் வழித்தடம் குறித்து ஆட்சேபனை இருந்தால், அதை தெரிவிக்க உச்ச நீதிமன்றம் 4 மாதங்கள் அவகாசம் அளித்துள்ளது. இந்தக் குழு, அந்த நபர்கள் சமர்ப்பித்த ஆவணங்களை ஆய்வு செய்து, யானைகள் வழித்தடத்தை ஆய்வு செய்து உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையை சமர்ப்பிக்கும்’’ என்றார்.

ஆய்வின்போது முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் கே.கே.கவுசல் மற்றும் வனத் துறையினர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்