தீபாவளி போனஸ் உயர்த்தி வழங்கக் கோரி நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்கள் போராட்டம்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு, தீபாவளி போனஸை உயர்த்தி வழங்கக் கோரி, கிருஷ்ணகிரியில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலக வளாகத்தில் நேற்று சுமை தூக்குவோர் மாநில பாதுகாப்பு சங்கம் சார்பில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் ராஜன் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ஆனந்தன் முன்னிலை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் ராஜேந்திரன், பழனி, அண்ணாமலை, ரமேஷ், குமார் உட்பட தொழிலாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதுதொடர்பாக மாவட்ட செயலாளர் ராஜன் கூறும் போது, ‘‘கிருஷ்ணகிரி, போச்சம் பள்ளி, ஊத்தங்கரை, ஓசூர், தேன்கனிக்கோட்டையில் மொத்தம் 156 சுமைதூக்கும் தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறோம். நாங்கள் கரோனா முழு ஊரடங்கில் இருந்து 8 மாதங்களாக விடுமுறை எடுக்காமல் தொடர்ந்து வேலை செய்து வருகிறோம். ஆனால் அரசு எங்களுக்கு இந்த வருடம் தீபாவளி போனஸ் 10 சதவீதம் மட்டுமே கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டதைப் போன்று, இந்த ஆண்டும் வழங்க வேண்டும். இதுதொடர்பாக பரிந்துரை செய்யுமாறு, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளோம்,’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்