தீபாவளி பண்டிகையையொட்டி, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்டம் சார்பில் நவ.11 முதல் 17-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் கும்பகோணம் கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் எளிதாகவும், சிரமம், இடையூறு இன்றியும் பயணம் செய்ய ஏதுவாக, சென்னையிலிருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகை, காரைக்கால், வேளாங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெயங்கொண்டம், கரூர், புதுக்கோட்டை, காரைக்குடி, ராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு நவ.11, 12, 13-ம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
இதேபோல, திருச்சியிலிருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, மதுரை ஆகிய இடங்களுக்கும், மதுரை, கோவை, திருப்பூர் ஆகிய இடங்களில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களுக்கும் மற்றும் கும்பகோணம் கழக இயக்கப் பகுதிகளுக்கு உட்பட்ட அனைத்து முக்கிய நகரங்களுக்கும், நவ.11, 12, 13-ம் தேதிகளில் சிறப்புப் பேருந்துகளும், அனைத்து முக்கிய நகரங்களில் இருந்து நகரப் பேருந்துகளும் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தீபாவளி முடிந்து அவரவர் ஊர்களுக்கு திரும்புவதற்கு வசதியாக நவ.14 முதல் 17-ம் தேதி வரை சிறப்புப் பேருந்துகள் இயக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago