தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள குற்றாலம் அருவிகள் மற்றும் அணைகள் இயற்கை எழில் சூழ்ந்தவை. குற்றாலம் அருவிகளில் சாரல் காலங்களிலும், சபரிமலைக்கு அய்யப்ப பக்தர்கள் செல்லும் காலங்களிலும் ஏராளமானோர் குளிப்பது வழக்கம். மேலும், கடனாநதி, ராமநதி, குண்டாறு, கருப்பாநதி, அடவிநயினார் அணைப் பகுதிகளுக்கும் அக்கம்பக்கத்தில் உள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சென்று குளிக்கின்றனர்.
ஆட்சியர் உறுதி
கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் குற்றாலம் அருவிகளில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், அணைப் பகுதிகளில் குளிக்க ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவிகளில் மக்கள் குளிப்பதைத் தடுக்க குற்றாலம் பிரதான அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி ஆகியவற்றில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனால், அருவிகளில் மக்கள் குளிக்க முடியாத நிலை உள்ளது.ஆனால், அணைப் பகுதிகளுக்கு சுற்றுவட்டார பகுதி இளைஞர்கள் தடையை மீறிச் சென்று குளிக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு குண்டாறு அணையில் குளித்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்தார். இதையடுத்து, அணைப் பகுதிகளில் பொதுமக்கள் குளிப்பதைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று, ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் சமீபத்தில் கூறினார்.
தொடரும் அலட்சியம்
இருப்பினும், தடையை மீறி அணைப் பகுதியில் குளிப்பது தொடர்கிறது. குண்டாறு அணையில் இருந்து உபரி நீர் வழிந்தோடும் பகுதிக்கு ஏராளமான இளைஞர்கள் சென்று குளித்து வருகின்றனர். இந்த வழியாக நடந்து சென்று செல்ஃபி புகைப்படம் எடுத்தும், வீடியோ எடுத்தும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.அணைகளில் குளிப்பதைத் தடுக்க, பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும், எச்சரிக்கையை மீறி தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு சென்று குளிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago