திருப்பூர் மாவட்டத்தில் ரூ.287 கோடியே 38 லட்சம் மதிப்பில் புதிய திட்டங்களுக்கு முதல்வர் அடிக்கல்

திருப்பூர் மாவட்டத்தில் ரூ.287 கோடியே 38 லட்சம் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி நேற்று அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்.

மாவட்ட வளர்ச்சி திட்டப் பணிகள் மற்றும் கரோனா நோய் தடுப்புப் பணிகள் குறித்து, ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் முதல்வர் கே.பழனிசாமி பங்கேற்றார்.

பல்லடம் பணிக்கம்பட்டி சின்னியக்கவுண்டம்பாளையம் கிராமத்தில் கால்நடை பராமரிப்புத் துறைக்கு சொந்தமான 4.5 ஏக்கர் பரப்பில், தேசிய வேளாண்மை அபிவிருத்தி திட்டம் மற்றும் நபார்டுதிட்டங்களின் கீழ் ரூ.11 கோடியே 38 லட்சத்து 26 ஆயிரம் மதிப்பில் கோழியின நோய் ஆய்வுக்கூடம் மற்றும் தீவன, நீர் பகுப்பாய்வு கூடத்தை திறந்து வைத்தார். நஞ்சப்பா நகர் பகுதியில் ரூ.26 கோடி மதிப்பில் இரண்டாம் மண்டல அலுவலகக் கட்டிடம், தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்டத்தின் கீழ்ரூ.28 லட்சம் மதிப்பில் சந்தைப் பேட்டை வளாகத்தில் வீடு இல்லாதவர்களுக்கு தங்கும் விடுதிக் கட்டிடம், தேசிய மீன் வள மேம்பாட்டுத் துறை மூலமாக ரூ.93 லட்சம் மதிப்பில் மீன் சந்தை வளாகம், திருப்பூர் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலைக்கு பல்பொருள் அங்காடி கட்டிடம், உடுமலை அரசு கலைக்கல்லூரிக்கு மூன்று வகுப்பறை அடங்கிய கட்டிடம், வெள்ளகோ வில் தீயணைப்பு வளாகத்தில் நிலைய அலுவலர் குடியிருப்பு மற்றும் பணியாளர்கள் குடியிருப்பு, பள்ளிக் கல்வி, சுகாதாரம், குடும்ப நலம் ஆகிய துறைகளின் சார்பில், ரூ.31 கோடியே 68 லட்சத்து 10 ஆயிரம் மதிப்பில் 18 முடிவுற்ற திட்டப் பணிகளையும் திறந்து வைத்தார்.

மேலும், கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் உடுமலைப்பேட்டை பண்ணைக்கிணறு கிராமத்தில் ரூ.82 கோடியே 13 லட்சம் மதிப்பில் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், திருப்பூர் மாநகராட்சி சார்பில் முருகம்பாளையத்தில் ரூ.2 கோடியே 50 லட்சம் மதிப்பில் நான்காம் மண்டல அலுவலகக் கட்டிடம், வாகனம் நிறுத்தும் இடத்துடன் கூடிய நான்கு தளங்கள், கூட்டுறவு, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உட்பட பல்வேறு துறைகளின் 12 திட்டங்களுக்கு ரூ.287 கோடியே 38 லட்சத்து 41 ஆயிரம் மதிப்பில் 12 பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும் பல்வேறு அரசுத் துறைகள் மூலமாக 5592 பயனாளிகளுக்கு ரூ.66 கோடியே 72 லட்சத்து 75 ஆயிரத்து 822 மதிப்பிலான நலத்திட்ட உதவி களை வழங்கினார். பின்னர், தொழிற்சங்கம், விவசாய சங்கம் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரை யாடினார்.

நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் கே.ராதாகிருஷ்ணன், சட்டப்பேரவை துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் க.விஜயகார்த்திகேயன், எம்.எல்.ஏ.க்கள் சு.குணசேகரன், கே.என்.விஜயகுமார், ஏ.நடராஜன், தோப்பு என்.டி.வெங்கடாசலம், தனியரசு உட்பட பலர் பங்கேற்றனர்.

தொழிலும், வேளாண்மையும் திருப்பூரின் இரண்டு கண்கள்

ஆய்வுக் கூடத்தில் முதல்வர் பழனிசாமி பேசும்போது, "காங்கயம் நகரத்தில் ரவுண்டானா அருகே காங்கயம் காளை சிலை அமைக்கப்படும். உடுமலைப்பேட்டை நகரம் நூற்றாண்டு கால சரித்திரம் படைத்தது. அந்த நூற்றாண்டு கால நகருக்கு, அடிப்படை தேவையான குடிநீர், தெருவிளக்கு, பேருந்து நிலையம், பூங்கா, அங்கன்வாடி மையம், நகராட்சி சேவை மையங்கள் ஆகியவற்றை மேம்படுத்த சிறப்பு நிதியாக ரூ.50 கோடி வழங்கப்படும். திருப்பூர் மாவட்டத்தின் இரண்டு கண்களான தொழில் மற்றும் வேளாண்மை சிறப்பாக நடைபெற அரசு துணை நிற்கும்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்