வேல் யாத்திரைக்கு அனுமதி மறுப்பு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் கைது

By செய்திப்பிரிவு

வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்டதை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பாஜகவினர் போராட்டங்கள் நடத்தினர். திருநெல்வேலியில் ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாவட்ட தலைவர் மகாராஜன் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர்கள் கணேசமூர்த்தி, தமிழ்ச்செல்வன், சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட 130 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தூத்துக்குடி

தூத்துக்குடியில் சிதம்பர நகர் பேருந்து நிறுத்தம் அருகே பாஜகவினர் திரண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். தெற்கு மாவட்ட தலைவர் பி.எம்.பால்ராஜ் தலைமைவகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எம்.ஆர்.கனகராஜ், மாநில ஓபிசி அணி செயலாளர் விவேகம் ரமேஷ், மாவட்ட பொதுச் செயலாளர்கள் வி.எஸ்.ஆர்.பிரபு, செல்வராஜ், சிவமுருகன் ஆதித்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக 20 பெண்கள் உட்பட 120 பேரை போலீஸார் கைது செய்தனர்.

கோவில்பட்டி

கோவில்பட்டியில் பாஜகசார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். நகரத் தலைவர் பாலசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட 9 பெண்கள் உட்பட 164 பேரை போலீஸார் கைது செய்தனர்.

தென்காசி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சுவாமி சந்நிதியில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட தலைவர் ராமராஜா தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் சுப்பிரமணியன், மாவட்ட துணைத் தலைவர்கள் முத்துக்குமார், பாலகுருநாதன், விருதுநகர் மாவட்ட பார்வையாளர் அன்புராஜ்,மாவட்ட கல்வியாளர் பிரிவு தலைவர் வெங்கடேஸ்வர பெருமாள், நகர தலைவர் கோவிந்தராஜ், ஒன்றிய தலைவர் சண்முகவேல் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 230 பேரை சங்கரன்கோவில் டவுன் போலீஸார் கைது செய்தனர்.

குமரியில் 573 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வேல்களை ஏந்தியவாறு வந்த பாஜகவினர், நாகர்கோவிலில் மாவட்ட பாஜக அலுவலகத்தில் குவிந்தனர்.

அங்கிருந்து ஆட்சியர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக வந்தனர். பாஜக மாவட்டத் தலைவர் தர்மராஜ் தலைமையில், மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆட்சியர் அலுவலகத்தில் டிஎஸ்பி வேணுகோபால் தலைமையில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.

அங்கு மறியல் நடைபெற்றது. போலீஸாருக்கும், பாஜகவினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர், 124 பெண்கள் உட்பட 573 பேர் கைது செய்யப் பட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்