தி.மலையில் அண்ணாமலையார் கோயில் தீப விழாவில் கரோனா விதிமுறைகளை பின்பற்றி தேரோட்ட விழாவையும், மாட வீதிகளில் தினமும் சாமி வீதியுலா நிகழ்ச்சி களையும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தி.மலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத் திருவிழா பிரசித்திப்பெற்றது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் நடைபெறும் மகா தீபத் திருவிழாவைக் காண லட்சக் கணக்கான பக்தர்கள் ஒன்று சேருவார்கள்.
இந்தாண்டு கரோனா ஊரடங்கு அச்சத்தால் 8 முறை பவுர்ணமி கிரிவலம் தடை செய்யப்பட்டுள்ள நிலையில் வரும் நவம்பர் 20-ம் தேதி தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் தீப திருவிழா தொடங்க உள்ளது. தொடர்ந்து, 10 நாட்கள் நடைபெறும் தீப விழாவில் வரும் நவம்பர் 29-ம்தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும், அன்று மாலை 6 மணியளவில் 2,668 அடி உயர முள்ள அண்ணாமலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். கட்டுப்பாடு களுடன் தீபத் திருவிழா நடைபெறும் என கூறப்படுகிறது.
தேரோட்டம் ரத்து
இந்தாண்டு கரோனா தொற்று அச்சத்தால் கார்த்திகை தீபத் திருவிழாவின் ஒரு பகுதியான 7-ம் நாள் நடைபெறும் மகா தேரோட்டம் விழாவும், தீப விழாவின் பத்து நாட்கள் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெறும் சாமி வீதியுலாவும் ரத்து செய்யப்படும் தகவல் வேகமாக பரவி வருகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் இதற்கான முன்னேற்பாடு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. எனவே, கார்த்திகை தீப தேரோட்டம், சாமி மாடவீதியுலா நடைபெறுமா? என்ற குழப்பத்தில் பக்தர்கள் உள்ளனர்.தீபத் திருவிழாவை நம்பி கோயிலை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பூ, பழ வியாபாரிகள் உள்ளனர். தேர்த் திருவிழா, சாமி மாடவீதியுலா ரத்து செய்தால் வியாபாரிகள் பாதிக்கப்படுவார் கள். எனவே, மாவட்ட நிர்வாகம் கார்த்திகை தீபத் திருவிழாவில் தேர்த் திருவிழாவையும் சாமி வீதியுலாவையும் கட்டுப்பாடு களுடன் நடத்த வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாக உள்ளது.
அரசுக்கு கோரிக்கை
திருவண்ணாமலை நகராட்சி முன்னாள் தலைவர் தரன் கூறும்போது, ‘‘கரோனா ஊரடங்கு காலத்தில் ஒடிஷா மாநிலத்தில் பூரி ஜெகந்நாதர் கோயில் விழாவும் தஞ்சாவூரில் பெரிய கோயில் சாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடைபெற்றது. எனவே, கரோனாவை காரணம் காட்டி இந்தாண்டு தீபத் திருவிழாவில் தேரோட்ட நிகழ்ச்சி, தினமும் சாமி மாட வீதியுலா நிகழ்ச்சியையும் தடை செய்யக்கூடாது. விதிகளை பின்பற்றி நடத்த வேண்டும். மக்களையும், பக்தர்களையும் மாவட்ட எல்லையில், நகர எல்லையில் மாவட்ட நிர்வாகம் கட்டுப்படுத்தி தடுத்து நிறுத்திக் கொள்ளட்டும்.ஆனால், கடவுளை கட்டுப்படுத்த வேண்டாம் என்பது உலகில் உள்ள பல கோடி சிவ பக்தர்களின் வேண்டுகோளாக உள்ளது. இதற்கு, மாவட்ட நிர்வாகமும், மாவட்ட காவல் துறையும் இந்த அரசும் செவி சாய்த்து விழாவுக்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இல்லாவிட்டால் பொதுமக்கள், பக்தர்கள், வியாபாரிகள் என அனைத்துத் தரப்பினரையும் திரட்டி விரைவில் போராட்டம் நடத்துவோம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago