புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், இந்தச் சட்டங்களைத் தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது எனக் கோரியும் சென்னை தலைமைச் செயலகம் முன் நவ.26-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது.
தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் செயற்குழுக் கூட்டம் திருச்சியில் நேற்று நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்த அதன் மாநிலத் தலைவர் பூரா.விசுவநாதன் பின்னர், செய்தியாளர்களிடம் கூறியது: விவசாயிகளுக்கு எதிராகவும், பெரு நிறுவனங்களுக்கு சாதகமாகவும் கொண்டு வரப்பட்டுள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்தும், இந்தச் சட்டங்களைத் தமிழ்நாட்டில் அமல்படுத்தக் கூடாது. புதிய வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியும் நவ.26-ம் தேதி சென்னை தலைமைச் செயலகம் முன் விவசாயிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
நெல் கொள்முதல் செய்ய விவசாயிகளிடம் பணம் கேட்பதை உயர் நீதிமன்றம் கடுமையாக கண்டித்துள்ளது. விவசாயிகளின் வேதனையை உணர்ந்துதான் நீதிமன்றம் கடுமையான கருத்தைத் தெரிவித்துள்ளது. இதை நாங்கள் வரவேற்கிறோம். எனவே, நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகளில் ஈடுபடும் ஊழியர்கள் மீது தமிழ்நாடு அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதேவேளையில், நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சரியான ஊதியத்தை அளிக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கிடங்குடன் கூடிய நிரந்தர நெல் கொள்முதல் நிலைய கட்டிடம் கட்ட வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago