திருப்பத்தூர் அடுத்த கொரட்டி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் குறைதீர்வுக்கூட்டத்தில் ஆட்சியரிடம் கோரிக்கை

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அடுத்த கொரட்டி ஊராட்சியில் குடிநீர் பிரச்சினையை போக்க ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத் தொட்டியை அமைக்க வேண்டும் என ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் வட்டார அளவிலான மக்கள் குறை தீர்வுக்கூட்டம் நடைபெற் றது. திருப்பத்தூர் வட்டத்துக்குஉட்பட்டவர்களுக்கான குறை தீர்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் தலைமை வகித்தார்.

இதில், நிலப்பட்டா, சிட்டா அடங்கல், மின் இணைப்பு, குடிநீர் வசதி, வேலை வாய்ப்பு, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, காவல் பாது காப்பு உள்ளிட்ட 321 பொது நல மனுக்களை பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் சிவன் அருளிடம் வழங்கினர். இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். முன்னதாக, திருப்பத்தூர் அடுத்த இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியில் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக பட்டா கேட்டு மனு அளித்து வருகிறோம். இதுவரை பட்டா வழங்கவில்லை. எனவே, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளனர்.

திருப்பத்தூர் அடுத்த கொரட்டி ஊராட்சிக்கு உட்பட்ட தண்டுகானூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், "எங்கள் ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கடந்த 6 மாதங்களாக குடிநீர் விநியோகிக்கப்படவில்லை. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளனர்.

திருப்பத்தூர் சிவராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில்," கோவிலூர் சாலையில் ஆழ்துளைக் கிணறு மூடாமல் அப்படியே விட்டுள்ளனர். எனவே, பயனற்ற ஆழ்துளைக் கிணற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளனர்.

திருப்பத்தூர் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், "எங்கள் பகுதியையொட்டியுள்ள பசுமைநகர் குடியிருப்பு பகுதியில் பூங்கா அமைக்கப்பட்டது. அதை உரிய முறையில் பராமரிக்காததால் பூங்கா புதர்மண்டி பயனற்றுக் கிடக்கிறது. எனவே, பொதுமக்கள் மற்றும் சிறுவர்கள் நலன் கருதி பூங்காவை புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என கூறியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்