காவிரி டெல்டாவில் 18 லட்சம் ஏக்கர் பயிர்கள் கருகி வருகின்றன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வேதனை

By செய்திப்பிரிவு

காவிரி டெல்டாவில் சுமார் 18 லட்சம் ஏக்கர் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் கருக துவங்கியுள்ளது என்று தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங் களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் பகுதியில் தண்ணீரின்றி கருகும் சம்பா பயிர்களை பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்த பி.ஆர்.பாண்டியன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

காவிரி டெல்டா மாவட்டங் களான தஞ்சை, நாகை, திருவாரூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுமார் 18 லட்சம் ஏக்கர் விளை நிலங்களில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நடவு பணிகளும், நேரடி விதைப்பு பணிகளும் முடிவடைந்துள்ளது. களை எடுப்பு , உரமிடுகிற பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு கிட்டத்தட்ட கடந்த 10 நாட்களுக்கும் மேலாக பயிர்கள் கருக தொடங்கி விட்டன. இதனால் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நடப்பாண்டு கை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 2021ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலும் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் விடுவிக்க வேண்டும்.

கர்நாடகத்திடம் இருந்து தண்ணீரை பெறுவதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும். கடந்த வாரம் காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் உபரி நீரை கர்நாடக விடுவித்த அளவை ஏற்றுக் கொண்டு அதை மட்டுமே கணக்கில் கொண்டு பெருமைப்பட்டுக் கொள்வதை ஏற்க இயலாது. இது ஒரு சடங்கு கூட்டமாக நடைபெறுகிறது. காவிரி மேலாண்மை ஆணையத் தலைவர் காவிரி டெல்டா மாவட்டங்களை பார்வையிட வேண்டும்.

மேட்டூர் அணையில் இருக்கிற தண்ணீரின் அளவை கணக்கில் கொண்டு கர்நாடக அணைகளில் தண்ணீர் அளவையும் நேரில் பார்வையிட்டு கணக்கில் கொண்டு மாதாந்திர அடிப்படையில் நமக்கு தரவேண்டிய உரிய தண்ணீரை பெற்றுக் கொடுத்தால் தான் காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்க முடியும். இல்லை என்றால் பயிர் கருகுவதை பார்த்து மனமுடைந்து விவசாயிகள் தற்கொலை செய்து கொள்வதைத்தான் கணக்கிட முடியும் என்று தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்