பள்ளிபாளையம் அருகே 2 வீடுகளில் 80 பவுன் நகை கொள்ளை கும்பலைப் பிடிக்க தனிப்படைதீவிரம்

By செய்திப்பிரிவு

பள்ளிபாளையம் விசைத்தறி அதிபர் மற்றும் ஓய்வு பெற்ற பேப்பர் மில் ஊழியர் வீட்டில் அடுத்தடுத்த நாட்களில் நகை, பணம் கொள்ளையடித்து தலைமறைவான மர்ம கும்பலை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிபாளையம் அருகே அலமேடு கோயில்காடு பகுதியைச் சேர்ந்தவர் விசைத்தறி அதிபர் பாலசுப்ரமணி (53). கடந்த இரு தினங்களுக்கு முன்னர் இரவு பாலசுப்ரமணி தனது குடும்பத்தினருடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார். அப்போது வீட்டின் முன்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 60 பவுன் நகை, ரூ.1.25 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை திருடி தலைமறைவாகினர். புகாரின்பேரில் பள்ளிபாளையம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் கடந்த 1-ம் தேதி பள்ளிபாளையம் அருகே ஓடப்பள்ளியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேப்பர் மில் ஊழியர் வீட்டில் இருந்து 20 பவுன் நகை, ரூ.10 லட்சம் ரொக்கம் உள்ளிட்டவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து தலைமறைவாகினர். இச்சம்பவத்தில் தொடர்புடைய வர்களை கண்டறிவதற்குள் விசைத்தறி அதிபர் வீட்டில் நடந்த திருட்டு சம்பவம் பள்ளிபாளையம் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இரு சம்பவத்திலும் தொடர்புடையவர்களை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படையினர் தொடர் கொள்ளையில் ஈடுபடும் மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்