கரோனா பரவலைத் தடுக்க கல்லறைத் திருநாள் வழிபாடு ரத்து

கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், ஈரோடு கல்லறைத் தோட்டத்தில் இன்று (2-ம் தேதி) நடக்க இருந்த கல்லறைத் திருநாள் வழிபாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

கிறிஸ்தவர்களின் முக்கிய நிகழ்வான கல்லறைத் திருநாள் ஆண்டுதோறும் நவம்பர் 2-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த நாளில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள், அவர் களது குடும்பத்தில் இறந் தவர்களின் கல்லறையில் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர்களை வைத்து வழிபாடு செய்வார்கள்.

இந்த ஆண்டு கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கல்லறைத் திருநாள் வழிபாடு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஈரோடு மறை மாவட்ட முதன்மை குருவும், ஈரோடு புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையுமான ஜான் சேவியர் கூறியதாவது:

தமிழக அரசின் உத்தரவின்படியும், கோவை மறைமாவட்ட ஆயர் அறிவுறுத்தலின்படியும், இன்று (2-ம் தேதி) ஈரோடு கல்லறைத் தோட்டத்தில் திருப்பலி நடைபெறாது. கல்லறைத் தோட்டத்திற்கு பொதுமக்கள் செல்வதைத் தடுக்கும் வகையில், நுழைவுவாயில் மூடப்படும். வழிபாட்டுக்காக உள்ளே செல்ல யாருக்கும் அனுமதி கிடையாது.

அதே நேரத்தில் ஈரோடு புனித அமல அன்னை ஆலயத்தில் காலை 6 மணி, காலை 7.30 மணி, மாலை 5.30 மணிக்கு வழக்கம்போல் திருப்பலிகள் நடைபெறும். வரும் 3-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பொதுமக்கள் தனித்தனியாக கல்லறைத் தோட்டத்தில் தங்கள் உறவினர்கள் கல்லறைப் பிரார்த்தனைகளை செய்து கொள்ளலாம், என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE