காவலர் தேர்வை ரத்து செய்த ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து மாணவர் கூட்டமைப்பினர் புதுச்சேரியில் நேற்று கருப்பு கொடியுடன் ஊர்வலத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரியில் காலியாக உள்ள காவலர் பணியிடங்களுக்கான உடல் தகுதித் தேர்வு நவம்பர் 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதில் முறைகேடு நடக்க வாய்ப்புள்ளதாக ஆளுநர் கிரண்பேடியிடம் புகார்கள் சென்றதை அடுத்து தகுதி வாய்ந்த அதிகாரம் பெற்ற குழு வால் முடிவெடுக்கப்படும் வரை ஆட்சேர்ப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படும் என ஆளுநர் உத்தரவிட்டார். இதனால் காவலர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த தேர் வர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
இந்நிலையில் காவலர் பணிக்கான உடல்தகுதித் தேர்வை நிறுத்திய ஆளுநர் கிரண்பேடியை கண்டித்து புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் நேற்று புதுச்சேரி காமராஜர் சதுக்கத்திலிருந்து நேரு வீதி வழியாக ஆளுநர் மாளிகை நோக்கி கருப்பு கொடியுடன் ஊர்வலமாக சென்றனர். தலைமை தபால் நிலையம் அருகே அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தினர். அங்கு அவர்கள் ஆளுநர் கிரண்பேடியை கண்டித்தும், உடனடியாக காவலர் தேர்வை நடத்த வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago