பண்டிகைகால அன்பளிப்பு தரும் நிறுவனங்கள் 35 அரசு அதிகாரிகளிடம் இருந்து ரூ.4 கோடி பறிமுதல் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

பண்டிகை கால லஞ்சமாக அரசு அதிகாரிகளுக்கு கொடுக்கப்பட்ட பணம் குறித்த தகவலின்பேரில் 35 இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.4 கோடியே 12 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

பண்டிகை காலத்தை முன்னிட்டு அரசு அதிகாரிகள் சிலருக்கு தனியார் நிறுவனங்கள் பரிசுகள் மற்றும் பணம் கொடுப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளன. அவ்வாறு கொடுக்கப்படும் பணம் மற்றும் பரிசு பொருட்களும் லஞ்சமாகவே கருதப்படும். இதுகுறித்த தகவல்களின்பேரில் ஆண்டுதோறும் குறிப்பிட்ட சில அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்துவது வழக்கம். அதன்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் அரசு அலுவலகங்கள், அரசு அதிகாரிகளின் வீடுகள் என 35 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தியுள்ளனர். இதில் பண்டிகை கால லஞ்சமாக கொடுக்கப்பட்ட பணம் என ரூ.4 கோடியே 12 லட்சத்தை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

இத்தனை ஆண்டுகள் கைப்பற்றப்பட்ட பணத்தில் இதுவே அதிகபட்ச தொகை என லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர். அதிகபட்சமாக தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரிய மண்டல அதிகாரி பன்னீர்செல்வம் வீட்டில் ரூ.3 கோடியே 25 லட்சம், அவரது அலுவலகத்தில் இருந்து 33 லட்சம் கைப்பற்றப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 13 துணை பதிவாளர் அலுவலகங்களில் இருந்து ரூ.16 லட்சத்து 48 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

மேலும், சுரங்க இணை இயக்குநரின் அலுவலகம் மற்றும் வீடு, ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் சிக்கிய பணம் என மொத்தம் ரூ.4 கோடியே 12 லட்சம் லஞ்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்