பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி மற்றும் தடப்பள்ளி - அரக்கன்கோட்டை பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டு வரும் நிலையில், அணைக்கான நீர் வரத்து குறைவால் நீர் மட்டம் குறைந்து வருகிறது.
பவானிசாகர் அணை மூலம் கீழ்பவானி, தடப்பள்ளி - அரக்கன்கோட்டை, காலிங்கராயன் பாசனத்துக்கு உட்பட்ட இரண்டரை லட்சம் ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. பவானிசாகர் அணையில் 105 அடி வரை நீரினைத் தேக்கி வைக்க முடியும். அணையில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது. கடந்த இரு மாதங்களாக அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மழை பெய்ததால், அணையின் நீர் மட்டம் 100 அடியிலேயே தொடர்ந்தது.
இந்நிலையில், நீர்வரத்து குறைவாலும், பாசனத்துக்கு நீர் தொடர்ந்து திறக்கப்பட்டதாலும், கடந்த மாதம் 13-ம் தேதியன்று அணையின் நீர் மட்டம் 99 அடியாகக் குறைந்தது. அதன்பின்னர் தொடர்ச்சியாக அணையின் நீர்மட்டம் குறைந்து நேற்று மாலை 96.43 அடியாக உள்ளது.
அணைக்கான நீர் வரத்து விநாடிக்கு 998 கனஅடியாக இருந்த நிலையில், அணையில் இருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனத்துக்கு 900 கன அடி நீரும், கீழ்பவானி பாசனத்துக்கு 2300 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.
அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை வடகிழக்கு பருவமழைக் காலம் என்ற நிலையில், தமிழகத்தில் கடந்த இரு நாட்களுக்கு முன்னர் பருவமழை தொடங்கியுள்ளது. ஆனால், பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதிகளான கோவை, நீலகிரி மாவட்டத்தில் மழைப்பொழிவு தொடங்கவில்லை. எனவே, பருவமழை தொடங்கும்பட்சத்தில் அணைக்கான நீர் வரத்து அதிகரிக்கும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago