தஞ்சை மாவட்டத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் தமிழ்நாடு நாள் கொண்டாடிய 49 பேர் கைது

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நேற்று தமிழ்நாடு நாள் கொண்டாடிய பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த 49 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தின் பின்புறமுள்ள அரசு விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை முன்பு தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடு நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில், வெளிமாநிலத்தவருக்கு எதிரான தமிழர் ஒத்துழையாமை இயக்கத்தின் தொடக்க நிகழ்ச்சி யாக, பொதுமக்களுக்கு துண் டுப் பிரசுரங்கள் வழங்கி பிரச்சாரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில், பேரியக்கத்தின் மாநகரச் செயலாளர் இலெ.ராமசாமி தலைமையில் பங்கேற்ற மாவட்டச் செயலாளர் நா.வைகறை, தலைமைக் குழு உறுப்பினர் பழ.ராசேந்திரன், ஜெயக்குமார் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல, தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு தமிழர் தேசிய முன்னணி சார்பில் நடைபெற்ற விழாவுக்கு பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன் தலைமை வகித்தார். மக்கள் அதிகாரம் பொருளாளர் காளியப்பன், தாளாண்மை உழவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் கோ.திருநாவுக்கரசு, ஏஐடியுசி மாவட்ட துணைச் செயலாளர் துரை.மதிவாணன், தமிழ்த் தேச மக்கள் முன்னணி மாவட்டச் செயலாளர் ப.அருண்சோரி உள்ளிட்டோர் பங்கேற்று, தமிழ்நாட்டு வேலை உரிமை, பொருளியல் உரிமை, அரசுரிமை ஆகியவை தமிழருக்கே என முழக்கமிட்டனர். இதில் பங்கேற்ற 16 பேர் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல, ரயிலடியில் தமிழ்நாடு நாள் விழாவை நடத்துவதற்காக வந்த பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பழனிராஜன் உள்ளிட்ட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மேலும், அம்மாபேட்டை நான்கு சாலை சந்திப்பில் நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்டச் செயலாளர் என்.கிருஷ்ணகுமார் தலைமையில் தமிழ்நாடு கொடியை கையில் ஏந்தி, முழக்கங்கள் எழுப்பிய 15 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்பகோணம் மேலக்காவேரியில் தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பில் தலைமை செயற்குழு உறுப்பினர் விடுதலைச் சுடர் தலைமையில், தமிழ்நாட்டின் அரசுப் பணிகளிலிருந்து பிற மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி வணிக நிறுவனங்களில் துண்டுப் பிரசுரம் வழங்கிய 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்