தென்காசியில் உள்ள உலகம்மன் உடனுறை காசி விஸ்வநாத சுவாமி கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 5.40 மணிக்கு மேல் 6.20 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது. கரோனா பரவல் காரணமாக பக்தர்களின்றி கொடியேற்றம் நடைபெற்றது.
வருகிற 13-ம் தேதி வரை திருவிழா நடைபெறுகிறது. விழா நாட்களில் உற்சவர் வீதியுலா நடத்தாமல் கோயிலுக்குள்ளேயே தினமும் உற்சவர் புறப்பாடு நடத்தப்படுகிறது. தினமும் காலை 10 மணியளவில் மண்டகப்படி அபிஷேகமும், பகல் 12 மணியளவில் உச்சிகால பூஜையும், இரவு 7 மணிக்கு மண்டகப்படி தீபா ராதனையும் செய்யப்படுகிறது. சுவாமி, அம்பாள் அனைத்து தினங்களிலும் பூங்கோயில் என அழைக்கப்படும் ஏகசிம்மாசன வாகனத்தில் அலங்காரங்கள் செய்யப்பட்டு, கோயில் வளாகத்தில் மட்டும் பிரகார வலம் நடைபெறுகிறது.
வருகிற 9-ம் தேதி தேரோட் டம் நடத்துவதற்கு பதிலாக பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், சுவாமி, அம்பாள், சண்டிகேஸ்வரர் ஆகிய உற்சவ மூர்த்திகள் மூஷிகம், மயில், கேடயசப்பரம், பூங்கோயில் மற்றும் மேனா ஆகிய வாகனங்களில் காலை 9 மணியளவில் கோயிலுக்குள் பிரகார வலம் வரும் நிகழ்ச்சி நடைபெறும்.
வருகிற 11-ம் தேதி கோயிலுக்குள் அமைந்துள்ள ராஜகோபுரத்தை அடுத்துள்ள புல்வெளியில் அம்பாள் தபசுக் காட்சியும், மாலை 6 மணிக்கு தபசு இருக்கும் அம்மனுக்கு சுவாமி காட்சி தரும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு மேல் சுவாமி, அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெறுகிறது. 12-ம் தேதி ஊஞ்சல் உற்சவம் கோயிலுக்குள் நடைபெறுகிறது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago