சிவகங்கை அருகே சங்ககாலப் புலவர் ஒக்கூர் மாசாத்தியாரோடு தொடர்புடைய 2,500 முதல் 3,500 ஆண்டுகள் பழமையான கல் வட்டங்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து கொல்லங் குடியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் புலவர் கா. காளிராசா கூறியதாவது: பெருங்கற்காலத்தில் இறந்த மனிதனின் உடலை புதைத்து வழிபட்டனர். இறந்த உடலை பாதுகாக்க அதைச்சுற்றி பெரிய கற்களை அடுக்கி வைத்தனர். இவ்வாறான கல்வட்டங்கள் பல பகுதிகளில் காணப்படுகின்றன. கல் வட்டங்கள், கற்பதுகைகள் தொடர்பான செய்திகள் சங்க இலக்கியத்தில் காணப்படுகின்றன.
சிவகங்கை அருகேயுள்ள ஒக்கூர் சங்க காலத்தோடு தொடர் புடைய ஊர். ஒக்கூர் மாசாத்தியார் பாடல்கள் அகநானூறு, குறுந்தொகை, புறநானூற்றில் இடம் பெற்றுள்ளன. அவர் காலத்து ஈமக்காடு கல்வட்டங்கள் ஒக்கூர் அண்ணாநகர் பகுதியில் காணப்படுகின்றன. மலைப் பகுதியில் வெள்ளைக் கல்லாலும் மற்ற செம்மண் பகுதிகளில் செம்பூரான் கற்களாலும் கல் வட்டங்கள் பொதுவாக அமைக்கப்படும். ஆனால், இங்குள்ள கல்வட்டங்களில் இரண்டு கற்களும் கலந்து காணப்படுவது வியப்பாக உள்ளது.
கல் வட்டங்களின் உள்பகுதி யிலும் பிற்காலத்தில் தனித்தும் தாழிகளில் இறந்த உடலை அல்லது எலும்புகளை வைத்து அடக்கம் செய்து வழிபடும் முறை இருந்தது.
கல்வட்டம், கற்பதுகை, தாழிகள் உள்ள ஈமக் காடுகளில் மூத்தோர் வழிபட்ட இடத்தில் தொடர்ந்து வழிபடும் முறை இன்றும் மக்களிடையே உள்ளது. அதேபோல் இப்பகுதிக்கு எதிரே உள்ள பகுதியில் ஒரு கல் மேலச்சாலூர் மக்களால் தொன்று தொட்டு வழிபடப்பட்டு வருகிறது.
மேலும் இப்பகுதி கல் வட்டங்கள் எச்சமாகவே காணப்படுகின்றன, என்று கூறினார்.
தொல் நடைக்குழு ஆசிரியர் நரசிம்மன் உடன் இருந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago