இறுதி பருவத் தேர்வுகள் போல,அரியர் தேர்வுகளை ஏன் ஆன்லைனில் நடத்தக் கூடாது என்று யுஜிசிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தில் கரோனா பரவல்காரணமாக பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதனால், அரியர் தேர்வுகளை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி, திருச்செந்தூரை சேர்ந்த ராம்குமார் ஆதித்தன் உள்ளிட்டோர் சென்னைஉயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்குகளில் பதில்அளித்த அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ), “அரியர் தேர்வுகளை ரத்து செய்தது விதிகளுக்கு முரணானது” என்று குற்றம்சாட்டியது. இதற்கு பதில் அளித்த யுஜிசி, “இறுதி பருவ மாணவர்களை முந்தைய தேர்வு மதிப்பீட்டின் அடிப்படையில் தேர்ச்சியடையச் செய்ய முடியாது. எனவே, இறுதி பருவத் தேர்வுநடத்தப்பட வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தது.
இந்நிலையில், நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா முன்பு இந்த வழக்குகள் மீண்டும்விசாரணைக்கு வந்தது. அப்போது, பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்குமாறு தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.
இதைத் தொடர்ந்து நீதிபதிகள்,‘‘அரியர் தேர்வுகள் ரத்து விஷயத்தில், யுஜிசி நிலைப்பாடு என்ன?’’ என்று கேள்வி எழுப்பினர்.இதுதொடர்பாக யுஜிசி செயலர்விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர்.
அதற்கு பதில் அளித்த யுஜிசிவழக்கறிஞர், ‘‘அரியர் தேர்வு விவகாரம் தொடர்பாக தெளிவான கூடுதல் பதில் மனு தாக்கல் செய்யஅவகாசம் வழங்க வேண்டும்’’ என்று வேண்டுகோள் விடுத்தார். அரியர் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதில் தங்களுக்கு உடன்பாடுஇல்லை என்றும் யுஜிசி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அப்போது நீதிபதிகள், ‘‘இறுதிபருவ தேர்வுகளை ஆன்லைனில் நடத்தும்போது, அரியர் தேர்வுகளை ஏன் நடத்தக் கூடாது?’’ என்று கேள்வி எழுப்பினர். கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய யுஜிசிக்கும் உத்தரவிட்டனர். தமிழக அரசுபதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கி, விசாரணையைநவ.20-க்கு தள்ளிவைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago