கடலூர் மாவட்டத்தில் கூட்டுறவு அங்காடிகளில் ரூ.45-க்கு வெங்காயம் விற்பனை மாவட்ட ஆட்சியர் தகவல்

கடலூர் மாவட்டத்தில், கூட்டுறவுத் துறையின் மூலம் குறைந்த விலையில் தரமான வெங்காயம் பொதுமக்களுக்கு கிடைக்க வழிவகை செய்வது குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சாகமூரி தலைமை தாங்கி பேசியதாவது:

வெளிச்சந்தையில் நிலவும் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்தும் விதமாக தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் வெங்காயத்தை மொத்தமாக கொள்முதல் செய்து தமிழ்நாடு முழுவதும், கூட்டுறவு சிறப்பங்காடிகள், சுயசேவைப் பிரிவுகள், சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள், சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சரவணபவ பல்பொருள் அங்காடி மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 21 சிறு பல்பொருள் அங்காடிகளில் கிலோ ஒன்று ரூ.45-க்கு தரமான வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. எனவே தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் தரமான வெங்காயம் கிடைக்க கூட்டுறவுத்துறையினர் முனைப்புடன் செயல்படவேண்டும் என்று தெரிவித்தார்.

மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்தியா, கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் நந்தகுமார், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணைய மண்டல மேலாளர் சண்முகம், துணைப்பதிவாளர் (பொது விநியோகம்) ஜெகத்ரட்சகன், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநர் சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE