கிசான் திட்ட முறைகேட்டில் பணத்தை திரும்பப்பெற வெளி மாநிலங்களின் 44 மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் வேலூர் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை

By செய்திப்பிரிவு

தமிழகத்தில் பிரதமரின் கிசான் சம்மன் திட்டத்தில் தகுதியில்லாத பயனாளிகளை சேர்த்து பணத்தைப் பெற்றுள்ளதாக புகார் எழுந்தது.

வேலூர் மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் தகுதி யில்லாத பயனாளிகளை சேர்த்து முறைகேட்டில் ஈடுபட்டதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் மொத்தம் 3 ஆயிரத்து 864 பேர் முறைகேடாக சேர்க்கப்பட்டு பணம் பெற்றுள்ளது உறுதியாகியுள்ளது. இவர்களில் 340 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் என்றும் இவர்கள் மூலம் ரூ.10.20 லட்சம் முறைகேடாக பணம் பெற்றுள்ளனர்.

வேலூர் மாவட்டத்தில் மொத்தம் ரூ.1.35 கோடிக்கு முறைகேடாக பணம் பெற்றுள்ளது உறுதியானது. முறைகேடாக பணம் பெற்றவர் களிடம் இருந்து அந்தப் பணத்தை திரும்பப்பெற சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டது.

சிறப்பு குழுக்களின் தொடர் நடவடிக்கையால் மாவட்டத்தில் இதுவரை 2 ஆயிரத்து 885 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 7 லட்சத்து 53 ஆயிரம் பணத்தை திரும்பப் பெற்றுள்ளனர். மீதம் உள்ள நபர்களிடம் இருந்தும் வெளி மாநில நபர்களிடம் இருந்தும் பணத்தை திரும்பப்பெற தேவையான நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்த போது, ‘‘வேலூர் மாவட்டத்தில் கிசான் திட்ட முறைகேட்டில் மேற்கு வங்கம், கர்நாடகம், புதுச்சேரி, பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மட்டும் சுமார் 250 பேர் தகுதியற்ற பயனாளிகள் சேர்க்கப்பட்டுள்ளனர். வெளி மாநிலங்களில் இருந்து மொத்தம் 340 பயனாளிகளிடம் இருந்து பணத்தை திரும்பப்பெற 44 மாவட்ட ஆட்சியர்களுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதம் மீதான நடவடிக்கைகளையும் ஆட்சியர் கண்காணித்து வருகிறார்’’ என்று தெரிவித்தனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE