ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படும் அமைச்சர் ஜாக்டோ-ஜியோ நிதி காப்பாளர் குற்றச்சாட்டு

By செய்திப்பிரிவு

ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு அமைச்சர் செயல்படுவது கோழைத்தனமானது என்று ஜாக்டோ-ஜியோ நிதி காப்பாளர் மோசஸ் தெரிவித்தார்.

ஆசிரியர்களை பாதிக்கும் வகையில் தொடர்ந்து வெளியிட்ட அரசாணைகளை தமிழக அரசு திரும்பப் பெற வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் சிவகங்கை முதன்மைக் கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்டத் தலைவர் அமலநாதன் தலைமை வகித்தார். செயலாளர் முத்துப்பாண்டியன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் சிங்கராயர், மாவட்டப் பொருளாளர் குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஜாக்டோ-ஜியோ நிதி காப்பாளர் மோசஸ் சிறப்புரையாற்றினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் மோசஸ் கூறியதாவது: தமிழக அரசு ஆசிரியர்கள் பெற்று வந்த உரிமைகளை பறிக்கும் வகையில் தொடர்ந்து அரசாணைகளை வெளியிட்டு வருகிறது. இதனால் 3.5 லட்சம் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக செங்கோட்டையன் வந்த பிறகு எந்தவொரு ஆசிரியர் பணியிடமும் நிரப்பப்படவில்லை. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவர்களை பழிவாங்கும் நோக்கத்தோடு அமைச்சர் செயல்படுவது கோழைத்தனமானது. ஆட்சியாளர்கள் எங்களது கோரிக்கையை நிறைவேற்றினால் அவர்களுக்கு நல்லது.

இல்லையென்றால் அவர்களுக்கு எப்படி அரசியல் தந்திரம் தெரியுமோ? அதுபோல் எங்கு அடித்தால், எப்படி அடித்தால்? அவர்கள் வீழ்வார்கள் என்று எங்களுக்குத் தெரியும். அதைச் செய்வோம் இவ்வாறு அவர் கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்