புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படமாட்டாது என மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.
நெடுவாசலில் ஆட்சியர் கவிதா ராமு தலைமையில் நேற்று நடைபெற்ற வரும்முன் காப்போம் எனும் இலவச மருத்துவ முகாமை தொடங்கி வைத்து அவர் பேசியது:
புற்றுநோய் போன்ற அதிக பாதிப்புள்ள நோய்களை இதுபோன்ற முகாம்களின் மூலம் கண்டறிந்து, சிகிச்சை அளித்து குணப்படுத்தி விடலாம். மேலும், தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த அனைவருக்கும் உயர் தரத்திலான சிகிச்சை பெறுவதற்காக மக்களைத் தேடி மருத்துவ முகாம், இன்னுயிர் காப்போம் திட்டம் போன்ற சிறப்பு மருத்துவ திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் திட்டம் ஒருபோதும் செயல்படுத்தப்படமாட்டாது. அதற்கு உறுதியான நடவடிக்கையை தமிழக முதல்வர் எடுத்துவிட்டார் என்பதால் மக்கள் அச்சமின்றி இருக்கலாம். ஒவ்வொரு குடும்பத்திலும் செல்போன் இருப்பதைப் போன்று அறிவுசார் விளையாட்டுக்குரிய செஸ் பலகையை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். செஸ் விளையாட்டின் மூலம் மாணவர்களின் புத்திக்கூர்மை அதிகரிக்கிறது.
இந்தியாவிலேயே இதுவரை நடந்திராத செஸ் ஒலிம்பியாட் போட்டி, தமிழகத்தில் நடைபெற உள்ளது. 200 நாடுகளில்இருந்து 2,000 வீரர்கள் பங்கேற்கக்கூடிய இந்தப் போட்டியை நடத்தும் வாய்ப்பை தமிழக முதல்வர் ஏற்படுத்திக் கொடுத்திருப்பதை விளையாட்டுத் துறை அமைச்சர் என்ற அடிப்படையில் பெரும் பாக்கியமாக கருதுகிறேன் என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில், சுகாதார துணை இயக்குநர் கலைவாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago