குன்னூர் நகராட்சி கடைகளின் வாடகை தொடர்பாக - வணிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் : ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தல்

By செய்திப்பிரிவு

குன்னூர் நகராட்சி கடைகளின் வாடகை நிலுவை தொடர்பாக வணிகர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என்று, தமிழ்நாடு வணிகர் சங்கங்கள்பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, சென்னையில் நகராட்சி நிர்வாகம் இயக்குநர் பொன்னைய்யாவை நேற்று சந்தித்துதமிழ்நாடு வணிகர் சங்கங்கள் பேரமைப்பின் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா அளித்த மனு விவரம்:

நீலகிரி மாவட்டம் குன்னூர் நகராட்சியில் நிலுவையிலுள்ள 900 கடைகளின் வாடகை வசூல் தொடர்பான அறிவிப்பில், நகராட்சி நிர்வாகம் அளித்துள்ள நோட்டீஸ் அடிப்படையில் 3 தினங்களுக்குள் நிலுவை வாடகையை செலுத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2007-ம் ஆண்டு வெளியிட்ட அரசாணையின்படி, கடை வாடகை 3 மடங்கிலிருந்து 12 மடங்கு வரையும், குன்னூர் சங்க கட்டிட வாடகை ரூ.619-லிருந்து ரூ.19,585 என 31 மடங்கும் உயர்த்தப்பட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதனையும் 2016-லிருந்து பின்தேதியிட்ட நாளிலிருந்து வாடகை செலுத்த, தற்போது அனைவருக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. இது வணிகர்கள் மத்தியில் பெரும்அதிர்ச்சியையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது. கரோனா பேரிடர் காலமும் இணைந்து வணிகர்கள் மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். ஆட்சியில் உள்ள திமுக,நகராட்சி மற்றும் உள்ளாட்சி கடைகளுக்கு தமிழகம் முழுவதும் ஆய்வுக்குழு அமைத்து, ஒரேசீரான வாடகையை அமல்படுத்துவதாக தேர்தல் அறிக்கையில் உறுதி அளித்தது. முதல்வர் ஸ்டாலினும் இது குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.

அதனடிப்படையில், பாதிக்கப்பட்டுள்ள குன்னூர் வணிகர்களையும், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில நிர்வாகிகளையும் அழைத்து பேசி உடனடி தீர்வு காண வேண்டும். இதற்காக குழு அமைத்திடவும், அதுவரை மேல் நடவடிக்கைகளை தவிர்க்கும்படியும் கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்