நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில், கடந்த 8-ம் தேதி ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி, அதில் பயணித்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உட்பட 14 பேரும் உயிரிழந்தனர். விபத்து ஏற்பட்டபோது தன்னலம் பாராமல் நஞ்சப்பசத்திரம் மக்கள் மீட்புப்பணிகளுக்கு உதவினர். அவர்களின் உதவிக்கு கைமாறாக ராணுவம், விமானப்படை, காவல்துறை, மாவட்ட நிர்வாகம் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றன. நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, அரசும் உடனடியாக ரூ.2.5 கோடி ஒதுக்கியுள்ளது.
தற்போது நஞ்சப்பசத்திரம் கிராமத்துக்கு அரசின் அனைத்து துறைகளும் படையெடுக்க தொடங்கியுள்ளன. ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்ட கிராமம், வெளி ஆட்கள் நடமாட்டம் இல்லாமல் அமைதியாக உள்ளது. அவ்வப்போது சில ராணுவத்தினர் மற்றும் அரசு அதிகாரிகள் மட்டும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், வருவாய்த் துறை சார்பில் நஞ்சப்பசத்திரத்தில் வீடு, வீடாக நேற்று அலுவலர்கள் சென்று, முதியோர் ஓய்வூதியம் பெறுபவர்கள் குறித்து கணக்கெடுத்தனர். யாருக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்று கேட்டு, அதற்கான நடைமுறைகளை முடுக்கிவிட்டுள்ளனர்.
கால்நடை பராமரிப்புத் துறை அலுவலர்களும், அரசின் ஆடுகள் மற்றும் கோழிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளை அடையாளம் கண்டு வருகின்றனர். பல ஆண்டுகளாக இருந்துவரும் இந்த கிராமத்தை, ராணுவ ஹெலிகாப்டர் விபத்து புரட்டிபோட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்த கிராமத்தை உள்ளடக்கிய வண்டிசோலை ஊராட்சி தலைவர் மஞ்சுளா கூறும்போது, "திரைப்படத்தில் வரும் அத்திப்பட்டி போன்று, அடையாளம் இல்லாமல் நஞ்சப்பசத்திரம் இருந்தது. இந்நிலையில், ராணுவ ஹெலிகாப்டர் விபத்தின்போது மக்களின் தன்னலமற்ற சேவையால், தற்போது உலகம் அறியும் கிராமமாக மாறிவிட்டது. மக்களின் சேவையால் நெகிழ்ச்சியடைந்த அரசு, ராணுவம் ஆகியவை கிராம மக்களை தேடி வந்து உதவுகின்றன. இதனால், இந்த கிராமத்துக்கு விடியல் பிறந்துள்ளது. இந்த கிராமத்தில் 60 குடும்பத்தினர் வசிக்கின்றனர். அவர்களுக்கு பட்டா கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.
வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் கூறும்போது, "நீலகிரி மாவட்டத்தில் பட்டா வழங்க தடையுள்ள நிலையில், பலர் பட்டா வேண்டும் என கோரி வருகின்றனர். இது குறித்து முதல்வரிடம் பேசி, விதிமுறைகளை தளர்த்தி பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ள முயற்சி மேற்கொள்வேன்" என்றார்.
பாகங்கள் சேகரிப்பு
இதற்கிடையே, நஞ்சப்பசத்திரம் பகுதியில் விபத்து ஏற்பட்ட இடத்தில் சிதறிக்கிடந்த ஹெலிகாப்டர் பாகங்களை விமானப்படையினர் சேகரித்து வருகின்றனர். விபத்தில் உடைந்த ஹெலிகாப்டரின் வால், இறக்கை ஆகியவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி, சூலூர் விமானப்படை தளத்துக்கு கொண்டு செல்ல ஏதுவாக அடுக்கிவைத்துள்ளனர்.
பட விளக்கம்
குன்னூர் அருகே நஞ்சப்பசத்திரம் பகுதியில் நடைபெற்றுவரும், விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர் பாகங்கள் வெட்டி எடுக்கும் பணி. (அடுத்த படம்) நஞ்சப்பசத்திரம் கிராமத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ராணுவத்தினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago