கோவை ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில், இளைஞர் பாராளுமன்ற நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதை தொடங்கிவைத்து மாநகர காவல் ஆணையர் பிரதீப்குமார் பேசும்போது, “அண்மைக் காலமாக குழந்தைகளும், பெண்களும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர். பிற பெண்கள், குழந்தைகளை தங்கள் வீட்டில் உள்ள அம்மா, தங்கை போல பாவிக்க வேண்டும். சமூக விரோதிகள் சிலர் இளைஞர்களுக்கு போதை வஸ்துகளை விற்பனை செய்கின்றனர். இதில் மிக கவனமாக இருங்கள். போதைப் பழக்கத்துக்கு யாரும் அடிமையாகிவிடக்கூடாது. வாகனங்களில் செல்லும்போது தலைக்கவசம் இல்லாமல் செல்ல வேண்டாம். உங்கள் பாதுகாப்பு மற்றும் அனைவரின் பாதுகாப்பு உணர்ந்து வாகனம் ஓட்டுங்கள். சாலை விபத்துகளின் எண்ணிக்கை மற்ற மரணங்களை விட அதிகமாகி வருகிறது. எனவே, மிகவும் கவனத்துடன் வாகனங்களை இயக்குங்கள்” என்றார்.
கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமைவகித்து பேசினார். கல்விக் குழும முதன்மை நிர்வாக அதிகாரி கே.சுந்தரராமன் வரவேற்றார். கல்லூரியின் முதல்வர் பி.பேபி ஷகிலா நன்றி கூறினார். துறைத் தலைவர்கள் சந்தான லட்சுமி, அன்புமலர், விஜி மோள், ராதாகிருஷ்ணன், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில், மாணவர்கள் பல்வேறு பொறுப்பில் பாராளுமன்றத்தில் நடைபெறும் நிகழ்வுகள்போல செய்து காட்டினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago