கேரளாவில் பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் - கோவை, நீலகிரி மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிரம் : இறைச்சிக் கோழிகள் கொண்டுவர தடை; மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு

By செய்திப்பிரிவு

கேரளாவில் பறவைக்காய்ச்சல் பரவிவருவதால் கேரளா, கர்நாடகாமாநிலங்களிலிருந்து கோழிகள்,பறவைகள் மற்றும் அதன் தொடர்புடைய பொருட்களை, கோவை, நீலகிரி மாவட்டங்களுக்குள் கொண்டுவர தடை விதிக்கப்படுவதாக, மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.

கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் நோய் பரவியுள்ளதால், தமிழக எல்லைப்பகுதியில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கோவை மாவட்ட எல்லையான வாளையாறு சோதனைச்சாவடியில் மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கேரள மாநில எல்லைப் பகுதிகளான ஆனைகட்டி, வாளையாறு, வேலந்தாவளம், மேல்பாவி, முள்ளி,மீனாட்சிபுரம், கோபாலபுரம், செம்மனாம்பதி, வீரப்பகவுண்டன்புதூர், நடுப்புணி, ஜமீன்காளியாபுரம், வடக்காடு ஆகிய இடங்களில் உள்ள சோதனைச்சாவடிகளில் சுகாதாரத்துறை, வருவாய்துறை, காவல்துறை, உள்ளாட்சி துறைகள் மூலம் தீவிர கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 24 மணி நேரமும் சுழற்சி முறையில் பணியாற்றும் வகையில் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

கோவை மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள், புறக்கடை கோழிப்பண்ணைகள் என மொத்தம் 1,203 பண்ணைகள் உள்ளன. அங்கு அசாதாரண இறப்பு அல்லது பறவைக் காய்ச்சல் நோய் அறிகுறிகள் ஏதும் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள கால்நடை மருத்துவர்களை அணுகி தகவல் தெரிவிக்க வேண்டும். கேரளாவில் இருந்து அவசிய தேவைக்காக வருபவர்கள், வணிகம், மருத்துவ தேவைக்காக வருபவர்கள் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ‘கோவிட் நெகடிவ்’ சான்று வைத்திருக்க வேண்டும். இல்லையெனில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தியதற்கான சான்று வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அப்போது கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குநர் பெருமாள்சாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு நடவடிக்கை குறித்து மாவட்டஆட்சியர் சா.ப.அம்ரித் கூறும்போது, ‘‘கேரளா, கர்நாடகா மாநிலங்களிலிருந்து கோழிகள், மற்றும்அதன் தொடர்புடைய பொருட்கள்கொண்டுவரப்படுவது தீவிரமாககண்காணிக்கப்படுகிறது.

கக்கனல்லா, நம்பியார்குன்னு, தாளூர், சோலாடி, கக்குண்டி, பூலகுன்னு, நாடுகாணி, பாட்டவயல் ஆகிய எட்டு சோதனை மற்றும் தடுப்புச் சாவடிகளில் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.நீலகிரிமாவட்டத்துக்குள் இறைச்சிக்கோழிகள் கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது’’என்றார் .

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்