காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் - 4 புதிய கூட்டுறவு மருந்தகங்கள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 4 புதிய கூட்டுறவு மருந்தகங்களை தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலின் காணொலிக் காட்சிமூலம் திறந்து வைத்தார். இந்த கூட்டுறவு மருந்தகங்களில் 20 சதவீதம் வரையிலான தள்ளுபடியில்மருந்துகள் வழங்கப்பட உள்ளன.

தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் முத்தியால்பேட்டை அருகே உள்ளகருக்குப்பேட்டை, அமராவதிப்பட்டினம், செங்கல்பட்டு மாவட்டத்தில் பெரிய பொத்தேரி, சிங்கப்பெருமாள் கோவில் ஆகிய இடங்களில் 4 புதிய கூட்டுறவு மருந்தகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கூட்டுறவு மருந்தகங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார். இந்த மருந்தகங்களில் விற்கப்படும் மருந்துகளுக்கு 20 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட உள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் கூட்டுறவு மண்டல இணைபதிவாளர் எஸ்.லட்சுமி, செங்கல்பட்டு சரக துணைப் பதிவாளர் சுடர்விழி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியில் மகளிர் சுய உதவிக் குழு, மாற்றுத் திறனாளிகள், விவசாயிகள் உள்ளிட்டோருக்கு ரூ.24,96,694 கடன் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் கருக்குப்பேட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம் பங்கேற்று முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார். உத்திரமேரூர் சட்டப்பேரவை உறுப்பினர் க.சுந்தர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE