ஓசூரில் கடும் பனியிலிருந்து - மலர்களை பாதுகாத்து உற்பத்தியை பெருக்க மின்விளக்குகளை பயன்படுத்தும் விவசாயிகள் :

By ஜோதி ரவிசுகுமார்

ஓசூரில் பனிக்காலத்தில் குறைந்து வரும் மலர் உற்பத்தியை அதிகரிக்கும் வகையில் தோட்டத்தில் எல்இடி மின்விளக்குகளை எரிய விட்டு மலர் உற்பத்தியை அதிகரிக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். இந்த முறையில் மலர் உற்பத்தி அதிகரித்து நல்ல பலன் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சியுடன் கூறுகின்றனர்.

ஓசூர் மற்றும் அதைச் சுற்றியுள்ள தளி, கெலமங்கலம், தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் மலர் உற்பத்திக்கேற்ற குளுமையான தட்பவெட்ப நிலை உள்ளதால் இப்பகுதியில் பெரும்பாலான விவசாயிகள் ரோஜா, செண்டுமல்லி, சாமந்தி உள்ளிட்ட பல்வேறு மலர்கள் சாகுபடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இப்பகுதியில் ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர், ஜனவரி ஆகிய 3 மாதங்களில் அதிகளவு பனிப்பொழிவு இருப்பதால் பனியில் மலர் மொட்டுக்கள் கருகி மலர் உற்பத்தி பாதிக்கப்படுகிறது. இதனால் ஆண்டுதோறும் பனிக்காலங்களில் நஷ்ட மடைந்து வரும் விவசாயிகள், பனிக்காலத்திலும் உற்பத்தியை பெருக்க பல்வேறு வழிமுறைகளை கடைபிடித்து வருகின்றனர்.

அந்த வகையில் ஓசூர் அருகே மத்தம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணாரெட்டி, தனது சாமந்தி மலர் தோட்டத்தில் இரவு வேளையில் நூற்றுக்கணக்கான எல்இடி மின் விளக்குகளை எரியச் செய்து பனிக்காலத்திலும் மலர் உற்பத்தியை பெருக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

இதுகுறித்து விவசாயி கிருஷ்ணரெட்டி கூறியதாவது: பனிக்காலத்தில் மலர் செடிகளின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு மலர் உற்பத்தி குறைந்து விடுகிறது. ஆகவே பனிக்காலத்தில் மலர் தோட்டத்தில் மின்விளக்குகளை எரிய விட்டால் செடிகளுக்கு நோய் தாக்குவது, பனியால் கருகுவது குறைந்து செடிகள் நன்றாக வளர்ச்சி அடையும். மேலும் மொட்டுக்கள் பெரிய அளவில் மலர வாய்ப்பு ஏற்படுகிறது.

10 அடி இடைவெளியில் அமைத்துள்ள எல்இடி மின் விளக்குகளை மாலை 6 மணிக்கு எரிய விட்டு காலை 6 மணிக்கு அணைத்து விடுகிறோம். இம்முறையில் ஒரு மலர் தோட்டத்தில் சுமார் 25 நாள் முதல் 30 நாட்கள் வரை மட்டுமே மின்விளக்குகளை பயன்படுத்துகிறோம். அதன் பிறகு அடுத்த தோட்டத்துக்கு மின் விளக்குகளை மாற்றம் செய்து விடுகிறோம்.

இந்த நவீனமுறை மலர் சாகுபடியில் நல்ல பலன் கிடைப்பதாக விவசாயி கிருஷ்ணாரெட்டி மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்