குழித்துறை தேசிய நெடுஞ்சாலையில் - ஒரு மாதமாக முடங்கிய கழிவுநீர் ஓடை சீரமைப்பு :

By செய்திப்பிரிவு

குழித்துறையில் போக்குவரத்து நெரிசல் மிக்க நாகர்கோவில் - திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கழிவுநீர் ஓடை சீரமைக்கும் பணி நடைபெற்று வந்தது. சாலையோரம் 20 அடி நீளத்துக்கு குழி தோண்டப்பட்ட நிலையில், ஒரு மாதமாக பணி நடைபெறாமல் முடங்கிக் கிடந்தது. மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டதுடன், அடிக்கடி வாகன விபத்துகள் நடந்து வந்தன. மேலும், சாலையோரம் செல்லும் பயணிகளும் கழிவுநீர் ஓடைக்குள் விழுந்து காயம் அடைந்தனர்.

கழிவுநீர் ஓடை தோண்டப்பட்ட பின்பு சீரமைப்பு பணி நடைபெறாததால் அப்பகுதியில் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பயணிகள் குழித்துறை நகராட்சி நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். ஆனால், கழிவுநீர் ஓடை சீரமைப்பு பணி தொடங்காமலேயே இருந்தது. இதனால், தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் வாகனங்கள் கழிவுநீர் ஓடையில் சிக்கி விபத்துக்குள்ளாகும் அபாயம் தொடர்ந்தது. இதுகுறித்து, கடந்த 14-ம் தேதி இந்து தமிழ் திசையில் செய்தி வெளியானது.

இதன் எதிரொலியாக ஒரு மாதமாக முடங்கியிருந்த குழித்துறை கழிவுநீர் ஓடை சீரமைப்பு பணியை உடனடியாக தொடங்கி விரைந்து முடிக்குமாறு குமரி மாவட்ட நிர்வாகம் குழித்துறை நகராட்சிக்கு உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து குழித்துறை தேசிய நெடுஞ்சாலை ஓரம் கழிவுநீர் ஓடை சீரமைப்பு பணி தொடங்கியது. பணி வேகமாக நடந்து வரும் நிலையில் ஒரு வாரத்துக்குள் சீரமைக்கப்பட்டு சாலையோர பகுதி சமன்படுத்தப்படும் என நகராட்சியினர் தெரிவித்தனர். இதனால், குழித்துறை தேசிய நெடுஞ்சாலை பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்