உடன்குடி அருகே தேரிக்குடியிருப்பு - கற்குவேல் அய்யனார் கோயிலில் கள்ளர் வெட்டு திருவிழா :

By செய்திப்பிரிவு

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகேயுள்ள தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோயிலில் பிரசித்தி பெற்ற கள்ளர் வெட்டு திருவிழா நேற்று குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் பங்கேற்புடன் நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டு தோறும் நடைபெறும் கள்ளர் வெட்டு திருவிழா மிகவும் பிரச்சித்தி பெற்றது. இந்நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, கள்ளர் வெட்டு நடைபெறும் இடத்தில் இருந்து புனித மண் எடுத்து செல்வார்கள். இந்த ஆண்டு இத்திருவிழா கடந்த நவம்பர் மாதம் 17-ம் தேதி தொடங்கியது.

விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள் மற்றும் வில்லிசை நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் இம்மாதம் 14-ம் தேதி தொடங்கின. கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக புனித தீர்த்தம் எடுத்து வரும் நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்பின்றி கோயில் ஊழியர்கள் மட்டும் கலந்து கொண்டனர். மாவிளக்கு பூஜை , திருவிளக்கு பூஜை மற்றும் பக்தர்கள் நேர்ச்சை வழங்கும் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன. அதேநேரத்தில் டிசம்பர் 14, 15-ம் தேதிகளில் வழக்கமான பூஜைகள் நடைபெற்றன. ஆன்லைனில் பதிவு செய்த பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

நேற்று (டிச.16) காலை முதலே பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. கோயில் பூசாரி , சாமியாடிகள் மற்றும் கோயில் நிர்வாகத்தின் அனுமதி பெற்ற 500 பேர் மட்டும் அனுமதிக்கப்பட்டனர். மாலை 3 மணிக்கு மேல் சுவாமி கள்ளர் வெட்டுக்கு புறப்பட்டார். கோயிலின் பின்புறம் உள்ள செம்மணல் தேரியில் மாலை 4 மணியளவில் கள்ளர் வெட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. கள்ளராக பாவிக்கப்படும் இளநீரை தேரி மணலில் வைத்து பூசாரி வெட்டினார்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் 500 பக்தர்கள் புனித மண் எடுத்துச் சென்றனர். கோயிலுக்கு வரும் அனைத்து பாதைகளும் அடைக்கப்பட்டிருந்தன. எஸ்பி ஜெயக்குமார், திருச்செந்தூர் ஏஎஸ்பி ஹர்சிங் ஆகியோர் தலைமையில் போலீஸார் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்