அரசு விழாவுக்கு அழைப்பில்லை: மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் குற்றச்சாட்டு :

By செய்திப்பிரிவு

அரசு விழாக்களில் பங்கேற்க மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களை அழைப்பதில்லை என நாகை மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

நாகை மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் கூட்டம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. மாவட்ட ஊராட்சித் தலைவர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் பேசியது:

சோழன்: ஊராட்சிகளுக்கு வழங்கிய விளையாட்டு உபகரணங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. அரசு வழங்கிய விளையாட்டு உபகரணங்களில் சிலவற்றை அதிகாரிகள் எடுத்து கொண்டு மீதியை கொடுத்துள்ளனர். எனவே, இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும்.

கணேசன்: இயற்கை இடர்பாடு காலங்களில் நாகை மாவட்டத்தில் கடற்கரையோர பகுதியான அக்கரைப்பேட்டை, வடக்கு பொய்கைநல்லூர், தெற்கு பெய்கைநல்லூர் ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் எளிதாக நகர பகுதியை அடைவதற்காக அமைக்கப்பட்ட சாலைகள் மிகவும் சேதமடைந்துள்ளன. இந்த சாலைகளை விரைவாக சீரமைக்க வேண்டும்.

சரபோஜி: மழையால் பாதிப்படைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும். பொட்டாஷ் உரம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. எனவே, உரம் விலை உயர்வை தடுக்க வேண்டும்.

சுரேஷ்: அரசு விழாவுக்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களை அழைப்பது இல்லை. அரசு விழாவுக்கு அழைத்தால் மக்களின் குறைகளை எடுத்துக் கூற முடியும். மாவட்ட ஊராட்சிக் கூட்டத்தில் ஆட்சியர் கலந்துகொள்ள வேண்டும் என கடந்த 2 ஆண்டு காலமாக உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால், உறுப்பினர்களின் கோரிக்கையை ஆட்சியர் புறக்கணித்து வருகிறார்.

செல்வி: தற்பொழுது பெய்த மழையால் பட்டமங்கலம் சாலை உள்ளிட்ட பல்வேறு சாலைகள் சேதமடைந்து போக்குவரத்துக்கு பயனற்றதாக மாறிவிட்டன. இவற்றை சீரமைக்க வேண்டும்.

உமாமகேஸ்வரி(தலைவர்): அரசு விழாக்களுக்கு மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களை அழைக்க வேண்டும் என கடந்த 2 ஆண்டு காலமாக அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை அழைக்காமல் இருக்கும் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். வருங்காலங்களில் மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் ஆட்சியர் கலந்துகொள்ள ஏற்பாடு செய்யப் படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்