தனியார்மயமாக்கல் மசோதாவை எதிர்த்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகளின் - 2 நாள் வேலைநிறுத்தம் தொடக்கம் :

By செய்திப்பிரிவு

வங்கிகள் தனியார்மய மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் 2 நாள் வேலைநிறுத்தத்தை நேற்று தொடங்கிய நிலையில், திருச்சி மாவட்டத்தில் ரூ.200 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வங்கி அலுவலர்கள் தெரிவித்தனர்.

பொதுத் துறை வங்கிகளைத் தனியார்மயமாக்கும் முடிவுக்கு வங்கி தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து நாடு தழுவிய அளவில் 2 நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை நேற்று தொடங்கினர்.

இதன்படி, திருச்சி ஸ்டேட் வங்கி பிரதான கிளை வளாகத்தில், ஏஐபிஇஏ, ஏஐபிஓசி, என்சிபிஇ, ஏஐபிஓஏ, பிஇஎப்ஐ ஆகிய தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொழிற்சங்க நிர்வாகிகள் கிருஷ்ணமூர்த்தி, ராமராஜூ, கணபதி சுப்பிரமணியன், சரவணன், நீலகண்ட சர்மா ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதுகுறித்து வங்கி தொழிற்சங்கத்தினர் கூறும்போது, “திருச்சி மாவட்டத்தில் 300-க்கும் அதிகமான வங்கிக் கிளைகள் மூடப்பட்டுள்ளன. ஊழியர்கள், அதிகாரிகள் என 2,500-க்கும் அதிகமானோர் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர். இதனால், ரூ.200 கோடி அளவுக்கு வர்த்தகம் பாதிக்கப்படும்’’ என்றனர்.

புதுக்கோட்டை அண்ணா சிலை அருகே வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் கே.என்.ராஜேந்திரன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தால் மாவட்டம் முழுவதும் 180 வங்கிக் கிளைகள் மூடப்பட்டன. 1,800 ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை.

அரியலூர் ஸ்டேட் வங்கி வளாகத்தில் ஸ்டேட் வங்கி ஊழியர் சங்க அரியலூர் மண்டல பொதுச் செயலாளர் துரைராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 80 வங்கிக் கிளைகள் மூடப்பட்டிருந்தன.

பெரம்பலூர் வெங்கடேசபுரம் ஸ்டேட் வங்கி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அனைத்து வங்கி ஊழியர் சங்க கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஹரிஹரன் தலைமை வகித்தார். மாவட்டம் முழுவதும் 53 வங்கிகள் மூடப்பட்டிருந்தன. 334 ஊழியர்கள் பணிக்குச் செல்லவில்லை.

கரூர் ஸ்டேட் வங்கி முன்பு அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம் ஐ.வெங்கடேசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டம் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட வங்கிக் கிளைகளில் பணியாற்றும் 1,200 ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர். இதன்மூலம் நாளொன்றுக்கு ரூ.20 கோடி பண பரிவர்த்தனை பாதிக்கப்படும் என சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தஞ்சாவூரிலுள்ள ஸ்டேட் வங்கியின் முதன்மைக் கிளை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, தேசிய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் தமிழ்ச்செல்வன் தலைமை வகித்தார்.

மாவட்டம் முழுவதும் 400 வங்கிக் கிளைகளில் பணியாற்றும் 6,000 ஊழியர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்