தமிழகத்தில் அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் 71 லட்சமாக அதிகரிப்பு : மாநில பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தகவல்

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று பள்ளிக் கல்வித் துறை சார்பில் மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், தஞ்சாவூர், திருச்சி, புதுக்கோட்டை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்துக்கு, பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமை வகித்தார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், பள்ளிக்கல்வித் துறை ஆணையர் கே.நந்தகுமார், மாநில திட்ட இயக்குநர் ஆர்.சுதன், இல்லம் தேடி கல்வி திட்ட சிறப்பு பணி அலுவலர் கே. இளம்பகவத், தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் ஆட்சியர் சுகபுத்ரா, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், க.அண்ணாதுரை, என்.அசோக்குமார், டி.ஆர்.பி.ராஜா, வை.முத்துராஜா, க.சொ.க.கண்ணன், நிவேதா முருகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கூட்டத்துக்கு பின்னர், செய்தியாளர்களிடம் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியது:

கூட்டத்தில், பள்ளிக் கல்வித்துறை சார்பில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பிற மண்டலங்களிலும் வாரந்தோறும் புதன், வியாழக்கிழமைகளில் ஆய்வு, ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. பிப்.22 -ம் தேதி வரை இந்த ஆய்வுக்கூட்டம் நடத்தப்பட உள்ளது.

தஞ்சாவூரில் உள்ள மாநகாட்சி பள்ளியை பார்வையிட்டேன். அங்கு மாணவர்களிடம் கற்றல் திறன் குறித்து கேட்டேன். மேலும் பள்ளியில் இருந்த ஆசிரியர்களிடம் தேவையான வசதிகள் குறித்து கேட்கப்பட்டது. தமிழகத்தில் கடந்த காலங்களில் அரசு பள்ளிகளில் 66 லட்சம் மாணவர்கள் இருந்தனர். தற்போது இது 71 லட்சமாக அதிகரித்துள்ளது. மாணவர்களின் விகிதாச்சாரத்துக்கு ஏற்ப ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்