தூத்துக்குடி: பாகிஸ்தான் போரில் இந்தியா வெற்றி பெற்றதன் பொன் விழாவை முன்னிட்டு தூத்துக்குடியில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் நேற்று நடத்தப்பட்டது. இதில் 1,971 போரில் பங்கேற்ற 12 முன்னாள் படை வீரர்களை மாவட்ட ஆட்சியர் கவுரவித்தார்.
கடந்த 1971-ம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தானுக்கு எதிரான போரில் இந்தியா மகத்தான வெற்றி பெற்றது. பாகிஸ்தான் ராணுவம் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் இந்தியப் படைகளிடம் சரணடைந்த டிசம்பர் 16-ம் தேதி ஆண்டு தோறும் போர் வெற்றி தினமாக கொண்டாப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு பாகிஸ்தான் போரில் வென்றதன் பொன் விழாவாகும்.
இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு குறைதீர் நாள் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாவட்ட ஆட்சியர் கி.செந்தில் ராஜ் தலைமை வகித்தார். கூட்டத்தில் முன்னாள் படைவீரர்களிடம் இருந்து 19 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார்.
1,971 போரில் பங்கேற்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் செல்லப்பா, மனோகரன், கணபதி, காசி அருணாச்சலம், மாடசாமி, ராமசாமி, சுப்பையா, அண்ணாமலை, சுப்பையா நாராயணன், காசிராம், குருசாமி, ராஜநாராயணன் ஆகிய 12 பேருக்கும் கேடயம் வழங்கியும், சால்வை அணிவித்தும் ஆட்சியர் பாராட்டு தெரிவித்தார்.
ஆண்டு தோறும் போர் வெற்றி தினத்தை சிறப்பாக கொண்டாட வேண்டும் என முன்னாள் படைவீரர்கள் கோரிக்கை விடுத்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் படைவீரர் நலத்துறை உதவி இயக்குநர் சுஜாதா, மாவட்ட முப்படை வீரர்கள் வாரிய முன்னாள் துணைத் தலைவர் கர்னல் சுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago