தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம் :

By செய்திப்பிரிவு

ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டத்தில் கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் 2 இடத்தில் இயங்கி வருகிறது. இதில், ஆம்பூர் அடுத்த வடபுதுப்பட்டு பகுதியில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2019-ம் ஆண்டு முதல் அரவைப்பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டன. ஆண்டுதோறும் கரும்பு அரவைக்கான பணிகளை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி தொழிற்சங்கம் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆம்பூர் பகுதியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்க வந்த தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, விரைவில் 2 கூட்டுறவு சர்க்கரை ஆலைகளும் இயங்க உரிய நடவடிக்கையை அரசு எடுக்கும் என வாக்குறுதி அளித்தார். அதன்படி திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் வரும் 24-ம் தேதி அரவை தொடங்க இருப்பதாக ஆலை நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவைப்பணிகள் தொடங்குவது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. இதனால், ஏமாற்றமடைந்த அனைத்து தொழிற்சங்கத்தினர் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும்போது, ‘‘ கடந்த 3 ஆண்டுகளாக ஆம்பூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையை திறக்க அரசு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இங்கு பணியாற்றி வரும் தொழிலாளர்களுக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. இதற்கிடையே, திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவைப்பணிகள் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள நிலையில், ஆம்பூர் சர்க்கரை ஆலையில் அதற்கான அறிவிப்பு வெளியாகாமல் இருப்பது எங்களை ஏமாற்றுவதாக உள்ளது ’’ என்றனர்.

இதைத்தொடர்ந்து, தொழிற்சங்கம் நிர்வாகம் சார்பில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களிடம் நேற்று மாலை பேச்சுவார்த்தை நடத் தப்பட்டது. இதில் சுமூக உடன்பாடு ஏற்படாததால் போராட்டதை தொடர்வதாக தொழிற்சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்